நாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்

ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அநேகமானோர் கடினம், கசக்கும் என வெறுக்கும் இரசாயனவியலின் மேல் எனக்கு காதல்வரக் காரணமாகி இன்று என்னை ஒரு நிலைக்கு உயர்த்தி விடக் காரணமானவர் நாகரட்ணம் சேர்.

2002ம் ஆண்டு தை மாதம், ஒரு ஓலைக் கூடாரத்தின் கீழ் இரசாயனவியலின் அறிமுகமும் ஒரு சிறந்த பண்பான ஆளுமையின் அறிமுகமும் ஒருசேரக் கிடைத்த தருணம் அது. மனதிற்குள் ஒரு உற்சாகம் கலந்த படபடப்பு. இரசாயனவியலினைப் பற்றி முன்னவர்களால் கட்டப்பட்டிருந்த விம்பம், வாழ்க்கைப் பாதையின் திசைகளைத் தீர்மானிக்கப்போகும் ஒரு நீண்ட பயணத்தின் முதற்படியில் முதல் நாள், இரசாயனவியலில் இமயத்தை போன்ற ஒருவர், விடவும் ஒரு முன்னால் லெப்டினன், என என்னை ஆக்கிரமித்திருந்த உணர்வுக் கலவையினை ஓரிரு வார்த்தைகளால் இன்று வெளிப்படுத்துவது கடினம்.

Lt. T.Nagaratnam former deputy Principal of Jaffna Central College

Lt. T.Nagaratnam former deputy Principal of Jaffna Central College

அன்று அந்த வகுப்பிற்கு வந்தவர்கள் இருப்பதற்கு இடத்திற்கு கடினப்பட்டுக் கொண்டிருந்த போது மெல்ல உள்நுழைந்தார் நாகரட்ணம் சேர். உதட்டில் ஒரு மெல்லிய சிரிப்பு… “இன்று கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.. அடுத்த வகுப்பில் இருந்து மெல்ல மெல்ல பலபேர் நின்று விடுவார்கள்“ என்றார். ஆகா… என்னங்கடா இது… எவ்வாறு தன்னை பிரபல்யப்படுத்தி தனது வகுப்பிற்கு அதிகமான மாணவர்களை கவரமுடியும் என எண்ணி வகுப்பெடுப்பது தானே சிறப்பானது, இவர் என்ன மெல்ல மெல்ல பலபேர் நின்று விடுவார்கள் என்கின்றார்.. ஒரு வேளை இவர் ஒழுங்காகக் கற்பிக்க மாட்டேரோ… என என் சந்தேக நியுரோன் என்னை கலகப்படுத்தியது.. மெல்ல மெல்ல நாட்களும் வகுப்புக்களும் ஓடின… அன்று முதல் வகுப்பில் அவர் சொன்னது போலவே பல மாணவர்கள் வகுப்பில் இருந்து கழன்று ஓடினார்கள்.. ஆனால் என்னால் அவருடைய வகுப்பிற்கு வாராமல் தவிர்ப்பது இயலுமானதாக இருக்கவில்லை. அவரின் கற்பித்தல் முறையும் அவரின் ஆளுமையும் என்னைக் கட்டிபோட்டிருந்தது. அனேகமானோர் கடினம் என நினைக்கும் இரசாயனவியலினை சுவையான, எளிமையான வடிவமாக்கிப் பருகத் தந்தார். வகுப்பு நேரம் முடிந்தாலும் எப்பொழுதும் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என எவ்வளவு இன்னும் அதிகமான நேரத்திற்கு கற்பிக்க முடியுமோ அந்த நேரத்தினையும் எடுத்து கற்பித்தார்.

பொது இரசாயனவியலோ, சேதன இரசாயனவியலோ அல்லது அசேதன இரசாயனவியலோ அனைத்தையும் எளிமையான வடிவமாக்கி ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி கற்பித்தார். ஒரு இரசாயனவியல் கூறினைக் கற்பிக்கும் பொழுது அதற்குள் மற்றய இரசாயனவியற் கூறுகளைத் தொடர்புபடுத்துவதும் அந்த தொடர்புகளுக்குள் உள்ள சுவாரஸ்யங்களை எமக்கு தெளிவுபடுத்தி, எங்களிடம் குறுக்குக் கேள்விகளைக் கேட்பதன் ஊடாக எம்மை ஒரு அறிவார்ந்த விழிப்பு நிலையில் தொடர்ச்சியாக வைத்திருப்பதும் நாகரட்ணம் சேரின் கற்பித்தல் முறையில் உள்ள சிறப்பம்சமாகவும் மற்றய ஆசிரியர்களில் இருந்து வேறுபடும் தன்மையாகவும், இதுதான் பல மாணவர்கள் வகுப்பில் இருந்து கழன்று விடுவதற்குக் காரணமாகவும் இருந்தது.

நேர்த்தியான உடைத்தெரிவு, நேரந்த தவறாமை, கண்ணியம் மற்றும் கண்டிப்பு என தனக்கென்று ஒரு தனி அடையாளத்தினையும் ஆளுமையும் உறுதியாகப் பேணிவந்த ஒரு நல்ல மனிதர்.
நாகரட்ணம் சேரின் இரசாயனவியலின் இமாலய அறிவுத்திறனும் கற்பித்தல் திறனும் மட்டும் என்னை பாதித்திருக்கவில்லை அத்தோடு அவரின் இந்த தனிமனித ஆளுமையும் என்னை வெகுவாகக் பாதித்திருந்தது.

நல்ல குருவிடம் கல்வி கற்றது இறைவன் பெறும் வரம் போன்றது. என்னைப் போல் இன்னும் எத்தனை எத்தனை மாணவர்களை வரம் பெறச்செய்த அந்த நல்ல மனிதர், குரு இன்று இல்லை என எண்ணும் பொழுது மனது கனக்கின்றது, நினைவுகள் சுழல்கின்றது….. அந்த ஆசிரியருக்கு இந்த மாணவன் இதுவரைக்கும் எதனைத் தந்தான் என எண்ணும் பொழுது கண்களின் ஓரம் நனைகின்றது…

இந்த உணர்வுகளின் பிரதிபலிப்பினை இனி அவர் அறியப்போவதும் இல்லை, அவருக்கு பயனுள்ளதாக இருக்கப்போவதும் இல்லை. ஆனால் அவரின் ஆளுமையினாலும் அறிவாற்றலாலும் உயர்த்தப்பட்ட பல மாணவர்கள் நாகரட்ணம் சேரிடம் வாங்கிய வரத்தினை மற்றவர்கள் பயனுறச் செய்வார்கள் என்பதில் ஐயம் இல்லை!!! அந்த நல்ல மனிதரின் ஆன்மா அமைதியடைய இறைவன் அருள் புரியட்டும்…


தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்….
சூரிய கீற்றொளி தோன்றிடும் போதும்….
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்….
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்…..

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க்க….
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க்க….
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க்க….
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க்க……

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க…

Categories: குறிப்புக்கள், பாதித்தவை

Leave a Reply

Your email address will not be published.