ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அநேகமானோர் கடினம், கசக்கும் என வெறுக்கும் இரசாயனவியலின் மேல் எனக்கு காதல்வரக் காரணமாகி இன்று என்னை ஒரு நிலைக்கு உயர்த்தி விடக் காரணமானவர் நாகரட்ணம் சேர்.
2002ம் ஆண்டு தை மாதம், ஒரு ஓலைக் கூடாரத்தின் கீழ் இரசாயனவியலின் அறிமுகமும் ஒரு சிறந்த பண்பான ஆளுமையின் அறிமுகமும் ஒருசேரக் கிடைத்த தருணம் அது. மனதிற்குள் ஒரு உற்சாகம் கலந்த படபடப்பு. இரசாயனவியலினைப் பற்றி முன்னவர்களால் கட்டப்பட்டிருந்த விம்பம், வாழ்க்கைப் பாதையின் திசைகளைத் தீர்மானிக்கப்போகும் ஒரு நீண்ட பயணத்தின் முதற்படியில் முதல் நாள், இரசாயனவியலில் இமயத்தை போன்ற ஒருவர், விடவும் ஒரு முன்னால் லெப்டினன், என என்னை ஆக்கிரமித்திருந்த உணர்வுக் கலவையினை ஓரிரு வார்த்தைகளால் இன்று வெளிப்படுத்துவது கடினம்.