“அன்பே உன் பாதமென் சுப்ரபாதம்
ஆனந்த சங்கமம் தந்த பாதம்
என் வாழ்வில் வேறேதும் வந்தபோதும்
எந்நாளும் உன் பாதம் ரெண்டு போதும்.. ”
தொடர்க..
இளமை ததும்பலில் என்றும் மயங்கவைக்கும் குரல், அழுத்தமாக உச்சரிக்கும் வசனங்கள் என பாடவந்த முதல்பாடலிலேயே தன் வசீகரக் குரலினால் தமிழ் திரை இசையில் தனக்கெனத் தனியிடத்தினை ஒதுக்கிக் கொண்டவர் சுனந்தா. காதலின் மென்மையினை இசையின் மூலம் உணர்த்த சித்ரா, ஸ்வர்ணலதா வரிசையில் இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாடகி சுனந்தா. புதுமைப் பெண்(1983) திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் P.ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடிய “காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்..” என்ற பாடல் தான் தமிழ் திரையுலகில் இவரது முதலாவது பாடல்.
“காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்..
இது ஒரு காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்..”
காதல்…. மயக்கம்…. என்று இவர் உச்சரிக்கும் இடத்தினிலேயே தன் குரலிற்குள் கேட்பவர்களை ஈர்த்து விடுகின்றார் சுனந்தா. குரலின் நளினத்தில் சங்கதிகள் மாறும் அழகு நேர்த்தி. இந்தப் பாடலையும் இந்த சங்கதிகளையும் இரசிக்காதவர்கள் இருக்கமே மாட்டார்கள். ஆனால் எத்தனை பேருக்கு இந்தக் குரலுக்கு சொந்தக்காரி சுனந்தா என்று தெரியும் என்றால், அது மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும். பல இனிமையான பாடல்களை இவர் பாடியிருந்தாலும் பெரிதாக இரசிகர்கள் மத்தியில் இவரின் பெயர் அறிமுகமாகவில்லை என்பதே உண்மை.
அண்மையில் வெளிவந்த “ஓ சுனந்தா சுனந்தா.. ஒரே சுகமாய் நடந்தாய்.. ” என்ற “முப்பொழுதும் உன் கற்பனைகள்” திரைப்படத்தின் பாடல்தான் என்னை நீண்ட நாட்களின் பின்னர் பாடகி சுனந்தாவினை நினைக்க வைத்தது. பலபேருக்கு அறியப்படாமலும் சிலபேரின் இசை இதயங்களை வென்றும் வலம் வந்த அந்தப் பாடகி பாடிய பாடல்கள் ஏனைய முன்னணி பாடகிகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவு என்றாலும் அவற்றில் பலபாடல்களில் இவரின் தனித்துவத்தினை பதிந்து நிற்கின்றன.
“பட்டுப் பட்டு பூச்சி போல
எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசு
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் பறிக்க
துடிக்குதந்த செண்பகம்.. ”
“எங்க ஊரு பாட்டுக்காரன்” திரைப்படத்தில் சுனந்தாவின் இளமை ததும்பும் குரலில் பாடலின் பல்லவியினை கேட்டுப்பாருங்கள்.. என்ன அழகாக இளையராஜாவின் இசையினையும் விஞ்சி ஆழமாக மனதிற்குள் இறங்குதின்றது. இதுதான் சுனந்தாவின் தனித்துவம். எத்தனை உள்ளங்களில் சிங்கார சிம்மாசனம் இட்டமர்ந்த பாடல் இதை, காதல் அமுதம் சொட்டச் சொட்ட இளமை ததும்பும் மெல்லிய பாடிய பாடகி சுனந்தா.
“நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது..
….
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல் ”
இது இன்னோரு சுனந்தாவின் பதிவு. “சொல்லத் துடிக்குது மனசு” திரைப்படத்தில் மீண்டும் இளையராஜாவின் இசையில் பாடிய “பூவே செம்பூவே..” பாடலின் சரணம் தான் அது.. பாடிய பாடகி யாரென்று தெரியாமலே இந்தக் குரலில் மனதினைத் தொலைத்தவர்கள் பலர்.
“ஒரு கோலக்கிளி சொன்னதே… உண்மையா உண்மையா..” என என்றென்றைக்கும் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒர் அருமையான மெல்லிசைப் பாடலை P.ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடியவரும் இந்த சுனந்தாதான். இந்தப் பாடல் இசைந்து முடிந்த பின்னும் சுனந்தாவின் குரல் அப்படியே மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் எம் காதுகளுக்குள்.
காலத்தில் நீங்கா இடம் பிடித்த சில பாடல்களை தன் மயங்க வைக்கும் இளமை ததும்பும் குரலில் பதிவு செய்த இந்தப் பாடகி ஏனோ பெரிதாக அறியப்படாதது துரதிஸ்டமே. ஆனாலும் இந்தப் பாடல்களில் சுனந்தா பதிவு செய்த தன் தனித்துவத்தினை தேடி வருகின்றவர்களுக்கு நிட்சயமாக சுனந்தாவினை அடையாளப்படுத்தி நிற்கும். காலச்சுவடுகளில் சில தடங்களை யாராலும் அழிக்க முடியாது.
மேலும் : சுனந்தா பாடிய பாடல்களின் தொகுப்பு
Categories: இசை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
அருமை நண்பரே
தங்கள் தளம் பார்த்தேன்.சுனந்த பற்றிய பதிவு நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்.
எப்படி பாடல்களை இணைத்துள்ளீர்கள் என்பதனை தயவு செய்து விளக்க முடியுமா ?
அன்புடன்
தாஸ்
எனது தளத்தில் தரவேற்றி பின்னர் flash தொடுப்பின் ஊடாக இணைத்துள்ளேன்.
செம்மீன்னே ! செம்மீன்னே !