இரண்டு நாட்களுக்கு முன்னர் முகப்புத்தகத்தில் பரபரப்பாக ஒரு செய்தி; யாழ்பாணத்து இளம் பெண் ஒருவர் பல இலட்சங்கள் முகப்புத்தகத்தின் ஊடாக, புலம்பெயர்ந்த தமிழ் வாலிபர்களை ஏமாற்றி சம்பாதித்தாக இரண்டு இணையத்தளங்களில் வெளிவந்த தகவல் முகப்புத்தகத்தில் பரவியிருந்தது. முகப்புத்தகத்தின் ஊடாக “பல இளம் வாலிபர்களை” “ஏமாற்றினாராம்” என அந்த இளம் பெண்ணின் மீது கடுமையான விமர்சனங்களினையும் அந்த பெண்ணின் பல வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்பட்ட “அந்தரங்கமான (snapshots) படங்களையும்” தாங்கி வந்திருந்தன அந்த இரண்டு இணையத்தளங்களும். மறுநாள் இன்னும் ஓர் இணையத்தளத்தில் இந்த இரண்டு விமர்சனங்களையும் விமர்சித்தும் அந்தப் பெண்ணின் வாதத்தினை முன்வைத்தது போலவும் ஓர் தகவல் வெளியாகியது. பின்னர் மீண்டும் இரண்டாம் பதிப்பு ஒன்றை முன்னர் தகவல் வெளியிட்ட இணையத்தளங்களில் ஒன்றில் அந்தப் பெண்ணினையும் அந்தப் பெண்ணிற்கு சார்பாக தகவல் வெளியிட்ட இணையத்தளத்தினையும் இணைத்தும் ஏதேதோ கதைகள் எல்லாம் சொல்லி புதிதாக வெளியிட்டு இருந்தார்கள். அந்தச் செய்திகளும் அந்த செய்திகளை வெளியிட்ட இணையத்தளங்கள் மூன்றுமே என்னை இந்த பதிவினை எழுதுவதற்கு தூண்டியது.
ஒரு தெளிவான கண்ணோட்டத்தோடு பார்க்கின்ற போது, அந்த மூன்று தளங்களும் மொத்தத்தில் ஒரே “தரத்திலான” செய்தியினையே வெளியிட்டு இருந்தன. அந்தப் பெண் நியாயமற்ற முறையில் பணம் சம்மாதித்தாளா இல்லையா என்ன கேள்வியினை ஒரு புறத்தில் வைத்துவிட்டு, தங்களை சமூகப் பொறுப்பு “மிக” மிக்க இணையத் தளங்களாகக் காட்டிகொள்ளும் இந்தத் தளங்கள் செய்த இந்தப் பரப்புரை சரியானதா என்று பார்க்க வேண்டியது மிக முக்கியமாகின்றது. அந்தத் தளங்கள் சொல்வது போல வேறுயாரும் ஏமாற்று நபர்களிடம் சிக்கி பணங்களையும் தமது நேரத்தினையும் இழந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் பகிரப்பட்ட தகவலாக இருக்குமானால் அவர்களின் எழுத்துக்களும் அவை பகிரவந்த பாணியும் முற்றிலும் மாறுபட்டே இருக்கும். மாறாக ஒரு பெண்ணின் அந்தரங்க (இரவு உடைப் படங்களையும், வீட்டில் அணிகின்ற தனிப்பட்ட ஆடைகளையும்) படங்களை இவ்வாறு பொதுப்படையாக வெளியிட்டதும் அந்தப் பெண்ணின் பெயர் முகவரி என அனைத்து பிரத்தியேக தகவல்களையும் தெளிவாக வெளியிட்டது அந்தப் பெண்ணினை பலர் முன்னிலையில் “மானபங்க”படுத்துவதை ஒப்பானது.
ஒரு நபர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டாலும் அந்த நபரின் தனிப்பட்ட விடயங்ளை பகிரங்கப்படுத்துவதும், அவரின் அந்தரங்கங்களை பலர் முன்னிலையில் அம்பலப்படுத்துவதும் அல்லது அவரின் அடையாளங்களை தெளிவாக காட்சிப்படுத்துவதும் பத்திரிகை தர்மத்தில் அடங்கா. மேலும் ஊடகத்துறையில் பணியாற்றுகின்ற ஒரு நபர் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய விடயம் மானநஷ்டமும் அதனோடான அவமதிப்பு பற்றிய சட்டங்களும் (Defamation & Insult laws). எனவேதான் ஒரு குற்றத்தினைப் பற்றிய செய்தியினை வெளியிடும் போது குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நபரின் பெயரையோ ஊரையோ ஒருபோதும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுவதில்லை. அவரின் புகைப்படங்கள் கூட உருமறைப்புச் செய்யப்பட்ட பின்னரே பிரசுரிக்கப்படும். அதுவே இணையம் என்று வரும் போது இத்தகைய தனிப்பட்ட நபரிகளின் அந்தரங்கங்களையும் அடையாளங்களையும் இணையத்தில் பகிரும் போது போது மிகுந்த கரிசனை எதிர்ப்பார்க்கப்படுவதுண்டு. அதுவே இணையத்தில் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டங்களாகவும் வகுக்கப்படுவதுண்டு. இதன் ஒரு படியாகத்தான் எந்த ஒரு இணையத் தளத்திலும் அவர்களின் தளங்களில் தனிநபர் விபரப் பாதுகாப்புக் கொள்கைகள் (Privacy policy) என்னும் பக்கத்தினை தவறாமல் காட்சிப்படுத்தப்படுவதும் உண்டு. தங்களிடம் வருகின்ற பயனாளரகளது அந்தரங்கத் தகவல்கள் எவ்வாறு பகிரப்படும் யார் யாருடன் பகிரப்படும் என்றும் தெளிவாக வரையறுத்து வைத்திருப்பார்கள். இவற்றை எல்லாம் விடவும் ஒரு செய்திச் சேவையை வழங்கும் போது வழங்கும் செய்தியினை பற்றிய முழுமையான தெளிவுப்பாட்டையும் பெற்றிருக்க வேண்டும். இவற்றிற்கும் மேலாக சமூக வலைகளில் ஒரு தகவலினை வெளியிடும் போது அது எத்தகைய தாக்கத்தினை சமூகத்தின் மீது ஏற்படுத்தப் போகின்றது என்ற எதிர்கால கணிப்பினையும் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால்..
இவை பற்றிய எந்த ஒரு விளக்கங்களும் இல்லாமல், பரபரப்பிற்கு என்று மட்டும் செய்திகளை வெளியிட்டு அதன் ஊடாக தமது வியாபார நலன்களை நிவர்த்தி செய்யத் துடிக்கும் மனச்சாட்சி இல்லாத தளங்களே இவர்கள். ஒரு இளம் பெண்ணினை எந்தவிதமான நீதியான விசாரணைகள் எதுவும் இல்லாமல் இவர்கள் தம் பாட்டிற்கு போட்டி போட்டுக்கொண்டு சகித்துக்கொள்ள முடியாத கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களின் மூலமும் அந்தப் பெண்ணின் அந்தரங்கமான புகைப்படங்களின் மூலமும் இணையத்தினில் பெண்ணின் மானத்தினை பலியிட்டுள்ளார்கள். யாரோ சில நபர்கள் கொடுத்த குற்றச்சாட்டுக்களின் படி இந்தப் பெண் இந்தத் தளங்களின் ஆசிரியர்களால் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார், இந்த மனச்சாட்சி அற்ற அநாகரீகமான செயலினை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவற்றை எல்லாம் செய்து விட்டு, தங்கள் இணையத் தளங்களில் கோடிட்டு தங்களைத் தாங்களே சமூகத்தின் மீது அதீத அக்கறை கொண்டவர்களாக வர்ணிப்பது ஜீரணிக்கவே முடியவில்லை. அந்தப் பெண் உண்மையில் குற்றவாளியாகவே இருப்பினும் இவ்வாறு அந்தப் பெண்ணினின் மானத்தினை இணையத்தில் உலாவவிட இவர்களுக்கு யார் உரிமை தந்தது? ஒரு பெண்ணின் அந்தரங்க படங்களையும் அவளையும் விமர்சித்து அதில் வியாபார நலன் தேட முயற்சிக்கும் இவர்களது செயல் மொத்தத்தில் ஆபாசத் தளத்தினை நடாத்தி வியாபார நலன் தேடுவதை ஒத்தே இருக்கின்றது.
ஒரு வேளை அந்தப் பெண்ணினால் இவர்களுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டு இவர்களிடம் இருந்து நஷ்ட ஈடு கோரப்பட்டால் என்ன நடக்கக்கூடும் எனப் பார்த்தால், இவர்களின் தளத்தினில் இந்தத் தளத்தினை நடாத்துபவர்கள் பற்றியோ அல்லது நிர்வகிப்பவர் பற்றியோ எந்தத் தகவலும் இல்லை. மொத்தத்தில் இவர்கள் தமது முகம் மறைத்து இணையம் என்னும் திரைக்குப் பின்னால் உலாவரும் ஆசாமிகள். தமது அடையாளத்தினை மறைத்து செயற்படும் இவர்கள் எந்த வகையில் அந்தப் பெண்ணினை விமர்சித்து எழுத தகுதியானவர்கள். தங்களது முகத்தினை மறைத்து ஒரு பெண்ணின் படங்களை இணையத்தில் பரப்பி அதனூடாக தமது வியாபார நலன்களை நிறைவேற்றியிருக்கின்றார்கள்.
ஏமாற்றுபவர்களும் சரி, ஏமாற்றப்பட்டவர்களும் சரி, அதனை வைத்து வியாபார அனுகூலம் தேட முயற்சிப்பவர்களும் சரி; இவர்களிடம் எது சரி எது பிழை எனத் தீர்மானிக்கும் மனச்சாட்சி சார்ந்த அறநெறிக் கோட்பாடுகள் (Moral Principle) முழுமையாக வளர்க்கப்படாமையே இவர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைகின்றது.
இறுதியாக இத்தகைய தளங்களில் வருகின்ற தகவல்களை சீர்தூக்கிப் பார்க்காமல் அவற்றினை முகப்புத்தகங்களிலும் வேறு தளங்களிலும் பகிர்பவர்கள் சற்று சிந்தியுங்கள். இத்தகைய தளங்கள் இப்படியான செய்திகளை பிரசுரிப்பதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அந்த செய்திகள் எவ்வளவு தூரத்திற்கு அந்தச் செய்தி சார்ந்தவர்களை பாதிக்கச்கூடும் என்று சிலகணம் சிந்தியுங்கள். உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு எவ்வளவு அக்கறையோ அதுபோல மற்றவர்களது வாழ்க்கையின் தனித்தன்மையினையும் தனிமனித உரிமையையும் பாதுகாக்க முயலுங்கள். ஒருவேளை தவறாக பரப்புரை செய்யப்படும் செய்திகளினால், அந்தச் செய்திகளில் சம்பந்தப்பட்ட நபர் பாதிக்கப்படுவாராக இருந்தால்… நீங்களும் உங்கள் கைகளில் அவர்களின் இரத்தத்தனை சுமக்க நேரிடும்.
Rights Vs Reputations – Campaign against the abuse of defamation and insult laws [download id=”2″]
Categories: எனக்குத் தெரிந்தவை, பார்வை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
அருமையான பதிவு. அது மட்டுமல்ல ஏமாற்றுபவனை விட ஏமாந்தவனுக்கே தண்டனை தேவை. எனவே ஏமாந்தவர் தனது படத்தை பிரசுரித்திருக்க வேண்டும். அதை விடுத்து பழி வாங்குவதற்காக படங்களை தானே skype இல் எடுத்து போடக்கூடாது.