இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களின் ஒழுங்கமைந்த வரலாற்று பற்றிப் பார்க்கின்ற போதுதான் முக்கியமான ஒருவிடயத்தினை அவதானிக்க முடிகின்றது. தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் எவற்றிற்கும் ஒரு தொடர்சியான வரலாற்று தெளிவாக இல்லை என்பது அங்கு புலனாகின்றது. தென் இந்தியத் தொடர்புகள், வாணிபம், போர் நடவடிக்கை எனவும் யாழ்ப்பாண வன்னி இராச்சியங்களின் எழுச்சிகளும் வீழ்ச்சிகளும் என ஆங்காங்கே நடந்த சில சம்பவங்களை வைத்துத்தான் தமிழ்ப் பிரதேசங்களின் வரலாற்றினை தொடுக்க வேண்டியிருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், தமிழர் பிரதேசங்களின் பிரதேச வாழ்நிலைகளினூடாக நாகரிகமடைந்த மக்களின் வாழ்க்கை முறை பற்றியோ அல்லது அதனூடாக பின்னிப் பிணைந்த அரசியல் கலாச்சாரப் பாரம்பரியப் பிணைப்புகள் பற்றியோ இன்னும் ஒரு முழுமையான ஆராய்வோ அறிவோ தெளிவாகப் பெறப்படவில்லை.
சிங்கள இராச்சியங்களின் வரலாற்றினையும் பௌத்த கலாச்சாரத்தினையும் மத முத்திரைகளையும் முன்னிலைப்படுத்தி எழுந்த மகாவம்வம் சூழவம்சம் என்பனவற்றில் கூட சிங்கள ஆட்சி மையங்களையும் அதன் ஆட்சியாளர்களையும் அவர்களின் மீதான பௌத்த மதத் தாக்கத்தினையும் பெரிதாக மெருகி நிற்கின்றனவே தவிர சிங்கள மக்களின் வாழ்நிலை வளர்ச்சிப் படிகளையோ அவரிகளின் சமூக அலகுகளின் கலாச்சாரப் பின்னணி பற்றியோ பெரிதா எதுவும் சொல்லப்படவில்லை.
இன்னும் ஆழமாகப் பார்த்தால் இலங்கையின் மேற்குக்கரை நகர்களான புத்தளம், மன்னார், சிலாபம் என்பவற்றில் வாழ்ந்த சமூகக் கலாச்சரப் பின்னணி பற்றி எவருக்குமே தெளிவாகத் தெரியாது. சிலாவத்தில் உள்ள கண்ணகி வழிபாட்டு முறையும், நாகர்கோயிற் பிரதேசத்தில் உள்ள நாக வழிபாடும், வன்னியில் வழக்கில் உள்ள நாச்சிமார் வழிபாட்டு முறைகள் பற்றியும் இந்தத் தலைமுறையினருக்கு எதுவும் தெரியாது. இன்னும் ஏன் இந்தத் தமிழ்ப்பிதேசங்களின் வாழுகின்ற மக்களுக்கோ அல்லது பண்பாட்டு ஊடகங்களுக்கோ தமது பிரதேசவழக்குகள் பற்றிய தெளிவு இன்னமும் இல்லை.
எமது வரலாறு என்று எனக்கும் ஏன் எல்லோருக்கும் பாடசாலைக் காலங்களின் கற்பித்தவை விஜயனின் வருகையும், சங்கமித்தையின் வருகையும், ஏன் ஆங்கிலேயரின் வருகையும் தான். வரலாறு என்பது எப்போதும் “வருகையும் அதனூடான செல்லாக்குகளுமாகவே” எமக்குக் கற்பிக்கப்பட்டும் போதிக்கப்பட்டும் இருக்கின்றது. ஆனால் வரலாறு என்பது “புவியிலும் மானிடவியலும் பிணைக்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று இயைபுற்று ஏற்படுக்கின்ற ஒரு பண்பாட்டுக் கலாச்சார உருவாக்கமாகும்”. “வருகைகளும் செல்வாக்குகளும்” இந்தப் பிணைப்பின் மேல் வைக்கப்பட வேண்டிய ஒரு அலகு மாத்திரமே. அதாவது ஏற்கனவே இயைபுற்று இருக்கின்ற ஒரு பிணைப்பினுள் புதிதாக ஒரு வருகையின் ஆழுமை எவ்வாறு செல்வாக்குச் செலுத்தியது என்பதனைப் பார்க்கும் முகமாகவே இந்த அலகு நோக்கப்பட வேண்டும். ஆனால் எமக்கு அவை வேண்டும் என்றே திரிபுபடுத்தப்பட்டு விஜயனின் வருகையினால் மாற்றம்பெற்ற நிகழ்வுகளே இலங்கையின் வரலாறு என்று மெல்ல மெல்ல சொருகப்பட்டுள்ளது. இது பௌத்த ஆய்வாளர்களினால் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட செயற்பாடே அன்றி வேறேதும் இல்லை. விஜயனின் வருகையின் முன்னர் இருந்த இயக்கர் நாகர் போன்றோரின் சமூக வாழ்வாதாரங்கள் கலாச்சாரம் எத்தகையது என்னும் ஆய்வு இன்று வரைக்கும் ஆராயப்படவே இல்லை. அவை ஆராயப்பட்டால்தான் விஜயனின் வருகையினால் இயக்கர் நாகரின் சமூக வாழ்நிலைகளின் எழுந்த சிக்கல்களும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும் எவை என்பது தெளிவாகும். இவ்வாறான தெளிவற்ற சிக்கல் நிலைகளைப் பார்க்கும் போதுதான் நாங்கள் வரலாற்றை மேலிருந்து கீழாகப் பாரக்கின்றோமே தவிர அதனை கீழ் இருந்து மேலாகப் பார்க்கத் தவறிவிட்டோம் என்னும் உண்மை புலனாகின்றது. ஒரு ஆழக்குழி ஒன்றினுள் நாங்கள் மேலிருந்தது பார்க்கின்ற போது எமக்கு அந்தக் குழியின் அமைப்புகளோ அல்லது அதன் அம்சங்களோ முழுமையாக விளக்கமாகப் புலனாவதில்லை. மாறாக அதன் அடியிலிருந்து மேல் நோக்கி ஆராய்ந்து வருமோமேயானால் எமக்கு அந்தக் குழியின் அழகு மேலும் விளக்கமாகப் புலனாகும்.
எனவே இந்த கீழிருந்து மேலான ஒரு கண்ணோட்டம் என்னும் அடிப்படையில் தமிழர் வரலாற்றையும் அவர்களின் தாயக வாழ்நிலைகளையும் பார்க்க விரும்பும் ஒருவர் எடுத்து நோக்க வேண்டிய முதலாவது தெரிவு தமது கிராமம் என்னும் அலகுதான் என்ற தெளிவு மேலோங்கி இங்கே நிற்கின்றது. நாளைய சமுதாயம் எமது மூதாதயர்கள் வாழ்ந்த தாயகப் பிரதேசத்தின் வரலாற்றை எடுத்து நோக்க விரும்பும் போது அதற்கான முதலாவது படியினை நாங்கள் எற்படுத்திக் கொடுத்தால்தான் அவர்களால் தமது பாரம்பரியம் கலாச்சாரம் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தினை பெறக்கூடியதாக இருக்கும். மாறாக இந்த வரலாற்றுக் கடமையினை இன்று நிறைவேற்றத் தவறினால் எமது நாளைய சந்ததியினர் தமது வரலாற்றுக் கூறுகளைத் தேடினால் ஈழப்போராட்ட இடம்பெயர்வுகளில் இருந்துதான் அவர்களினால் தகவல்களைப் பெறமுடியும். அதற்கு முந்திய தகவல்கள் மிகவும் குறைவாகவும் திரிபுபடுத்தப்பட்டும் உள்ளது. எனவே நாம் ஒவ்வொருவரும் எமது தாயக வாழ்நிலைகளின் கிராம அலகுகளைப் பற்றிய அறிவில் ஒரு தெளிவு நிலையைப் பெறவேண்டியும், அதனை அடுத்த தலைமுறைக்கு பரிமாற்ற வேண்டிய ஒரு கடமைப்பாட்டினையும் கொண்டுள்ளோம்.
எமது தாயக நிலங்களின் இந்தக் கிராம மட்டங்களின் வாழ்நிலை பிணைப்புக்கள் என்பது ஒரு தெளிவான பார்வையோடு எடுத்து நோக்கப்படவேண்டும். இந்தப் பார்வையில் எந்தவிதமான பெருமை பேசும் நிறப்பிறழ்வு சாயம் சேர்க்கைகளையும் உள்ளடக்காது வரையறுக்கப்பட வேண்டும். தனது கிராமங்கள்தான் சிறந்தது என்னும் வீண் வம்பு, பெருமை பேசும் முன்னிலைகள் இடம்பெறவும் கூடாது. இன்று யாழ்பாணத்தில் உள்ள பல கிராமங்களின் புலம்பெயர் மக்களால் தமது கிராமம் பற்றிய ஒரு உருவாக்க நுால்களும் இணையத்தளங்களும் முகப்புத்தப் பக்கங்களும் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பலவற்றில் தமது குடும்பங்களை பெருமைப்படுத்தவும் தமது கிராமத்தினைப் பற்றி உயர்வாக சொல்வதும், தமது கிராம மக்களிடமே வீணான மனக்கசப்புகளை வளர்த்து விடுவதும் என்பதாகத்தான் அவர்களின் குறிக்கோளாக இருக்கின்றது. இன்னும் சிலர் முன்னேபோய், மற்றவர்களின் தவறுகளையும் பிழைகளையும் முன்னிறுத்தி அதனை அம்பலத்தில் ஆடவைப்பதற்குத்தான் இத்தகைய குழுக்களையும் இணையப் பக்கங்களையும் நடாத்துகின்றார்கள். இவற்றை எல்லாம் அப்பால் நிறுத்தி ஒரு நேர்மையான குறிக்கோளுடனும், தமிழர் தாயகத்தின் வரலாற்று கலாச்சாரங்களை கிராம மட்டத்தில் இருந்து எடுத்து நோக்க வேண்டியதின் அத்தியவசியத்தின் தன்மையினை உயர்ந்தும், முன்னே வருபவர்களுடம் கைகோர்த்து, நாங்கள் எமது வரலாற்றினை கிராமம் கிராமமாக தொகுத்து ஆவணப்படுத்த வேண்டியது, இன்றைய காலத்தின் கட்டாயம்.
அந்த அடிப்படையில், ஒரு ஆழந்த அகன்ற தெளிவான பார்வை ஒன்றின் ஊடாக, முடிந்த வரையில் எந்தவிதமான சாயங்களும் சேர்க்காமல், எனது தாய் தந்தையர் வாழ்ந்த கிராமமான வேலணையின் வரலாற்றினை, நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் பொறுப்பு கூற வேண்டிய கடமைப்பாடு உள்ள ஒரு சமூக அங்கியாக, ஆவணப்படுத்த விரும்புகின்றேன். முன்னர் ஒரு தடவை “வேலணை – ஒரு வரலாற்று அறிமுகம்” என்னும் நுாலாக வெளியிடப்பட்ட ஆவணத்தில் இருந்து சில பகுதிகளை தொகுத்தும் கல்விமான்களையும் புலம்பெயர் வேலணை மக்களிடம் இருந்து பெறக்கூடிய தகவல்களையும் ஆதாரங்களையும் தொகுத்தும், இன்றும் வேலணையில் வாழ்ந்து வருகின்ற பெரியோர்களிடம் இருந்து பெறக்கூடிய தகவல்களை தொகுத்தும் முடிந்தவரை எதிர்காலத்திற்குப் பயனுள்ள ஒரு சிறந்த ஆவணமாக இணையத்தில் உருவாக்குவதே இதன் நோக்கம். காலம் வரையறுக்காது, தொடர்களாக நீண்டகாலத்திற்கு பதிவுலகப் பதிவுகள் மூலமாக இணையத்தில் ஆவணப்படுத்தப்படும்.
இனி..
வேலணை – ஓர் இணைய ஆவணம். அடுத்த பதிவுகளில் ஆவணப்படுத்தப்படும்.
Categories: ஆவணம், இலங்கை, வேலணை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
வரலாறு என்பது “புவியிலும் மானிடவியலும் ///பிணைக்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று இயைபுற்று ஏற்படுக்கின்ற ஒரு பண்பாட்டுக் கலாச்சார உருவாக்கமாகும்”. “வருகைகளும் செல்வாக்குகளும்” இந்தப் பிணைப்பின் மேல் வைக்கப்பட வேண்டிய ஒரு அலகு மாத்திரமே.///- உண்மையான கருத்து
நல்ல கருத்துகளை தாங்கி வந்திருக்கிறது உங்கள் அறிமுகம். உங்கள் முயற்சி பெறவும், உங்கள் முயற்சி
இனிவருபவர்களுக்கு முன்னோடிய இருக்கவும் வாழ்த்துகிறேன்.
வரலாறு என்பது “புவியிலும் மானிடவியலும் ///பிணைக்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று இயைபுற்று ஏற்படுக்கின்ற ஒரு பண்பாட்டுக் கலாச்சார உருவாக்கமாகும்”. “வருகைகளும் செல்வாக்குகளும்” இந்தப் பிணைப்பின் மேல் வைக்கப்பட வேண்டிய ஒரு அலகு மாத்திரமே.///- உண்மையான கருத்து
நல்ல கருத்துகளை தாங்கி வந்திருக்கிறது உங்கள் அறிமுகம். உங்கள் முயற்சி வெற்றி பெறவும், அது
இனிவருபவர்களுக்கு முன்னோடியாக இருக்கவும் வாழ்த்துகிறேன்.
பகிர்வுக்க நன்றி
அன்புச் சகோதரன்…
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)
Excellent. keep up the good work
போற்றக் கூடிய முயற்சி. ஒரு துறையினரின் புகழ் பாடுவதில் முடிவுற்ற ‘வேலணை ஒரு வரலாற்று அறிமுகம்’ (2006) நூலின் கதி உங்கள் ஆக்கத்திற்கு ஏற்படாதவாறு எச்சரிக்கையாக இருங்கள்.