இன்றைய விடியலுடன் தமிழகத்தின் தேர்தல் களத்தில் இறுதிக் கட்டப் பலப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன. இம்முறை தமிழகத் தேர்தல் பலவித்தியாசமான அனுபவங்களை சந்தித்திச் செல்கின்றது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே தேர்தல் நடைபெறுவதும், கோடிக்கணக்கில் பறக்கும் படையிடம் பிடிபடும் கறுப்புப் பணங்களும், பறக்கும் படையினை விமர்சித்தவர்கள் கைது செய்யப்படுவதும், பிளாஸ்டிக் வகை சுவரொட்டிகள் முற்றாக நீங்கப்பட்ட தேர்தலாகவும், மாறி மாறி இலவசங்களால் நிறம்பிய தேர்தல் வாக்குதிகளும், தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர்தான் வெளியிடப்பட்ட நகைப்புக்குளான காங்கிரஸின் தேர்தல் அறிக்கைகளும், என பல புதுமைகள் நீண்ட தேர்தலாக இந்தக் தேர்தல் காணப்படுகின்றது…
வீட்டுக்கு ஒரு இலவச கலர் தொலைக்காட்சி என்ற திமுக வின் கடந்த தேர்தல் அறிவிப்புத்தான் அதன் வெற்றிக்கு அடித்தளம் இட்டது என்பதனை நன்கு உணர்ந்து கொண்ட கருணாநிதி இம்முறையும் தேர்தல் வாக்குறுதிகளாக “இலசவங்களை” அள்ளி வழங்கியிருக்கின்றார். திமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை காத்திருந்து முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்னும் பலபடி முன்னே போய் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் பார்க்க பல வித்தியாசமான இலவசங்களை அறிவித்திருக்கின்றார். “இலவசங்கள்” என்றால் தமிழக மக்கள் எதையும் மறந்து வோட்டுப் போட்டுவிடுவார்கள் என்ற ஒரு தரக்குறைவான மதிப்பொன்றை தமிழக மக்கள் மீது ஏற்படுத்தியிருக்கின்றார்கள் தமிழக அரசியல்வாதிகள். தன் வீடுக்கு ஒரு கலர் தொலைக்காட்சி இலசவசமாக வருகின்றதென்றால் எந்த தமிழ்க் குடும்பத் தலைவிதான் விரும்பமாட்டார். நன்றாக சாதாரண குடும்பத் தலைவிகளை இலக்கு வைத்து அடித்தார் கருணாநிதி. இம்முறை அதே வரிசையில் இன்னும் மேலே சென்று ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச மின்விசிறி, இலவச மிக்சி என அடுக்கி விட்டுருக்கின்றார் கருணாநிதி. மு க ஸாலினோ சில அரசியல் மேடைப்பேச்சுக்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் வோசிங்மெசின்(மின்துவைப்பான்) திமுகவினால் இலவசமாக வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றிருக்கின்றார். பா ஜ க தனது அறிக்கையில் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக பசுமாடுகள் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
மேலும் குடும்பங்களையும் குடும்பத் தலைவிகளையும் குறிவைத்து இத்தகைய இலவசங்களை வழங்கியிருந்தாலும் முதல்முறையாக இம்முறைதான் வாக்கு என்னும் அஸ்த்திரத்தினை உபயோகிக்கக் காத்திருக்கும் இளைய சமுதாயத்தினைக் குறிவைத்து ஒவ்வொரு கல்லூரி மாணவருக்கும் இலவச மடிக் கணணி என அவர்களையும் இலவச மாயைக்குள் இழுத்திருக்கின்றார்கள் முக்கியமாக கட்சிகள் அனைத்தும்.
ஆனால் இந்த இலவசங்களை அள்ளி வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வரப்போகின்றது? யார் தரப்போகின்றார்கள்? இந்தக் கேள்விக்கு யாருக்கும் விடைதெரியாது. அண்மையில் தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஷி திமுக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான வளத்தினை தமிழகம் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் தமிழகத்தின் தற்போதைய கடன் தொகையோ ஒரு இலட்சம் கோடிக்கு மேல் சென்று விட்டதாகவும் இன்னும் ஓர் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இலவசங்கள் வெறும் வாக்கு வாங்கும் மாயைதானோ என்று பல இணையத்தளங்களும் ட்வீட்டிர் பயனாளர்களும் தெரிவித்த வண்ணம் உள்ளர்கள். ஆனால் இணையப் புரட்சியாளர்கள் வாக்குச்சாவடிக்கு போவதில்லை என்றும் ஒரு வாதமும் உண்டு. அவர்களால் தமிழகத்தேர்தல் களத்தில் மாற்றம் ஏற்படுவதென்பது சந்தேகமே. இலவசங்களை நம்பியிருக்கும் சாதாரண குடும்பத்தினருக்கு இந்த தேர்தல் அறிக்கைகள் “ஆப்பிள்” தொகையாகக் கிடைத்தது போலத்தான் இருக்கும். அவர்கள் யார்யார் கூடுதலாக இலவசங்கள் தரப்போகின்றார்கள் என்று “கணக்குப்” பார்த்து தமது வாக்குகளை அளிப்பார்களாக இருக்குமானால் தமிழக மக்கள் மேல் அரசியல்வாதிகள் ஏற்படுத்தியிருக்கும் ஒரு தரக்குறைவான கண்ணோட்டம் உண்மையாகப் போனாலும் போகலாம்.
மேலும் கணக்கில் வராமல் கைமாற்றப்படும் கறுப்புப் பணங்கள் வாக்காள்களிடம் வதை தொகையாக வாறி வழங்கப்படுகின்றது. கட்டுக்கட்டாக பறக்கும் படையிடமும் தேர்தல் கண்காணிப்பாளர்களிடமும் பிடிபடும் பணம் இத்தகைய கறுப்பு பணத்தின் ஒரு பதியாக இருந்தாலும் மீதிப் பகுதி வாரி இறைக்கப்படுகின்றது இந்தத் தேர்தலில் என்பதும் உண்மையே. வாக்காளர்களைக் கவர்வதற்கு கட்டுக்கட்டாக பணம் கொடுக்கப்படுவது தெரிந்து அந்த இடத்திற்கு பறக்கும் படை செல்லும் முன்னமே பணத்தினை வீதியில் எறிந்து விட்டுப் போன சந்தர்ப்பங்ளும் உண்டு. என்னதான் பறக்கும் படையும் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கழுகுபோலக் காத்திருந்து பணங்களைக் கொடுத்து வாக்காளர்களைக் கவருவதைத் தடுக்கப் பார்த்தாலும் “இலவசங்களை”க் காட்டி வாக்குப் பெறமுயற்சிக்கும் அரசியல்வாதிகளை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பணத்தினை இலவசமாகக் கொடுப்பதும் பணத்திற்குப் பதிலாக பொருட்களை இலவசமாக கொடுப்பதும் ஒன்றுதான் என்பது தமிழக மக்களுக்கும் தேர்தல் கண்பாணிப்பாளர்களுக்கும் தெரியாமல் போய்விட்டது போலத்தான் தோன்றுகின்றது.
கடந்த தேர்தலுக்கு திமுக வினால் இலவசங்களாக கொடுக்கப்பட்ட கலர் தொலைக்காட்சி பெட்டியினால் திமுக வின் ஆதரவு பலமடங்கு பெருகியது உண்மையே. அதைவிடவும் அந்த தொலைக்காட்சியினால் திமுக வின் இன்னும் ஓர் மறைமுக அரசியல் நகர்வும் மிகவும் திறமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது அந்த தொலைக்காட்கிகளில் எந்த நேரமும் சண் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்கி நிகழ்வுகளே காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தத் தொலைக்காட்கி அலைவரிசைகள் யாவும் ஒரு பக்கச் சார்பான நிகழ்சிகளையும் செய்திகளையும் எப்போதும் ஒளிபரப்பிக் கொண்டு இருக்கின்றது. திமுகவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு முக்கியம் கொடுத்து ஒளிபரப்பப்படும் இத்தகைய தொலைக்காட்சி நிகழ்வுகள் எப்பொழுதும் தமிழக மக்களை திமுகவின் அரசியல் வட்டத்திற்குள் அமிழ்த்தி வைத்திருக்கின்றது என்பது மறைக்க முடியாத உண்மை. இத்தகைய வட்டங்களை உடைத்து அதிமுக எவ்வாறு இந்தத் எதிர்கொள்ளப் போகின்றது என்பது ஒரு கேள்விக்குறியே!
குடும்ப அரசியல், எல்லாத் துறைகளிலும் கால்பதித்து ஏகாதிபத்தியத்தை நிறைநாட்டத் துடிக்கும் தனிப்போக்கு, மின்சாரப் பிரச்சனை, ஈழப்பிரச்சனை, இரண்டாம் அலைக்கற்றை ஊழல் விவகாரம் போன்ற பிரச்சனைக்களை முன்வைத்து திமுக வினை எதிர்த்து தனது பிரச்சாரத்தை நடாத்தியது அதிமுக. குடும்ப அரசியலில் பாதிப்புக்களையும் முன்னேற்றகரமான அதிகலாபம் பெறக்கூடிய அனைத்து துறைகளிலும் தனது அரசியல் செல்வாக்கின் காரணமாக ஆழக் காலூன்றத் தொடங்கியுள்ளனர் திமுகவின் முன்னணி அரசியல்வாதிகள். குடும்ப அரசியல் மற்றும் சர்வாதிகார தனிப்போக்கு போன்றவற்றின் பாதிப்புக்கள் நேரடியாக சாதாரண தமிழக மக்களை பாதிக்காது விட்டாலும் மின்சாரப் பிரச்சனை, இரண்டாம் அலைக்கற்றை ஊழல் விவகாரம், ஈழம் போன்ற இன்ன பலபிரச்சனைகளை தமிழக மக்களின் மனதுகளில் கொஞ்சமேனும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது தெளிவு.
மறுபக்கத்தில் அதிமுக வில் இருந்து வைகோவினை கழற்றி விட்ட ஜெயலலிதாவின் தான்தோன்றித் தனமான செயலினை அதிமுகவின் உறுப்பினர்களே விரும்பிவில்லை என்பதனை அவர்களின் அண்மைய நடப்புக் காட்டுகின்றது. கழற்றி விடப்பட்ட வைகோவினை கூட்டுச் சேர்க்க கருணாநிதி முயற்சி செய்ததும் அறிந்ததே. மறுபக்கத்தில் 63 தொகுதிகளை போராடிப் பெற்றுக்கொண்ட காங்கிரஸ் தனது உள்வீட்டுப் பிரச்சனைகளினாலும் தேர்தலுக்கு சற்றும் முன்னாயர்த்தமற்ற நடவடிக்கையினாலும் தேர்தலுக்கு நான்கே நாட்களுக்கு முன்னர்தான் தனது தேர்தலறிக்கையை வெளியிட்டு கடும் நகைப்புக்குள்ளாகியது. தங்கபாலுக்கு எதிராக காங்கிரஸின் உறுப்பினர்களின் உள்வீட்டுப் பிரச்சனையினால் தமிழக காங்கிரஸ் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆட்டம் கண்டுள்ளது உண்மையே. மேலும் தமது கட்சிக்கு எதிராகவே காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்னும் அளவிற்கு தமிழக காங்கிரஸில் உட்கட்சிப் பூசல்கள் வலுத்துள்ளன. மறுபக்கம் காட்டுக் கத்து கத்தி வரும் விஜயகாந்தும் அவருக்கு எதிராக பலமேடைகளில் வாரித்தூற்றும் வைகைப்புயலும் பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருக்கின்றார்கள். தனது கட்சி ஆட்களையே நடுரோட்டில் போட்டு துவைத்து எடுக்கும் விஜயகாந்திற்கா உங்களது வாக்கு என வைகைப் புயல் புயலாக மேடைகளில் வீசிச்கொண்டிருக்கின்றது.
இன்னும் ஓர் பக்கம் சீமானும் அவரது தோழர்களும் ஈழப் பிரச்சனையை முன்னிறுத்தி காங்கிரஸிற்கும் திமுக விற்கும் எதிராக தமது கள வியூகங்களை நகர்த்தியுள்ளனர். “நாம் தமிழர் இயக்கமும்”, “நான் தமிழன்! திராவிடன் அல்ல” போன்றவர்கள் மொத்த திராவிடம் சார் கட்சிகளையும் அவர்கள் கொள்கைகளையும் விமரிசித்து தமிழகத்தில் தமிழர் ஆட்சிதான் அமையவேண்டும் எனவும் அதுதான் தமிழகத்திற்கும் ஈழத்தின் பிரச்சனைகளுக்கும் தீர்வு எனவும் அடித்துக் கூறிவருகின்றார்கள். திமுக அதிமுக காங்கிரஸ் போன்ற தமிழர் அல்லாத கட்கிகளை இவர்கள் தமிழகத்தில் இருந்து துரத்துவதற்கும் இந்தத் தேர்தலில் கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதைவிடவும் இறுதிநேரத்தில் குழம்பிக் கொண்டிருக்கும் வாக்காளர்களின் கவனத்தினைக் கவர்ந்து அவர்களை திமுகாவிற்கு எதிராகத் திருப்புவதற்கு என்றே விடுதலைப்புலிகள் சார்பான இணையத்தளங்களில் கனிமொழிக்கு நடேசனின் உருக்கமான கடிதம் என்று பலவகையான உருவக/உண்மைக் கதைகளை சந்தர்ப்பம் பார்த்து திருப்பி விட்டிருக்கின்றார்கள்.
மேலும் அதிமுகவிற்கு ஆதரவாக இந்து பத்திரிகையின் ஆசிரியரும் தமது பத்திரிகை வாயிலாக திமுகவின் வண்டவாளங்களை மறைமுகமாக வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்.
இவ்வாறாக இன்று களமிறங்கும் பல கட்சிகளைத் தம்மோடு இணைத்து கூட்டணியாகக் களம் குதித்திருத்திருக்கின்றது திமுகவும், அதிமுகவும். இந்தக் கூட்டணிக் கட்சிகள் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் பலமா பலவீனமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதுவும் நடக்கலாம். அதுதான் தேர்கற்களம். பொறுத்திருந்து பாரப்போம் யார் யார் யாருக்கு பலம் பலவீனம் என்று..
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
இலவசம் என்னும் லஞ்சம் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஒரு தடவை ஏமாற்றலாம், தொடர்ந்து ஏமாற்றமுடியாது என்பதை கருணாநிதி இந்த தேர்தல் தோல்வி மூலம் உணர்ந்து கொள்ளவிருக்கிறார். கட்டற்ற ஊழல் எல்லா மட்டங்களிலும் தாண்டவமாடியதையும், கருணாநிதியின் குடும்பத்தினர் அதிகார முறைகேடுகளினால் பெரும் லாபம் அடைவதையும் மக்கள் சகிக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தும்
நல்லையா தயாபரன்