யப்பான் எங்குமே சோகக் கடல் நிரம்பி வழிகின்றது. அதுவும் யப்பானின் வடகிழக்குக் கரைப் பகுதியில் அந்த சோகக்கடலின் அலைகள் தாக்கிய வேகத்தினை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை எனலாம். அடுத்தடுத்து இடைவிடாது யப்பானை உலுக்கிக் கொண்டிருக்கின்றது இயற்கையின் சீற்றங்கள். யப்பான் வரலாற்றில் இதுவரை பதிவாதாத ரிச்சர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தின் [ 1 ] பாதிப்புக்களும் வீரியமும் அடங்கும் முதல் சுனாமிப் பேரலைகள் யப்பானின் கிழக்குக் கரையில் கோரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்றது. நிலநடுக்கமும் சுனாமியலைகளும் யப்பானுக்கோ யப்பான் மக்களுக்கோ புதிதல்ல. அவர்களின் குடியிருப்பு வீடுகள் திடீர் திடீர் என ஏற்படும் நிலநடுக்கங்களை எதிர்கொள்ளும் முகமா அமைக்கப்பட்டு இருந்தாலும் இந்தப் பூமியதிர்வினால் ஏற்றபட்ட பாதிப்புக்கள் பாரதூரமாகியுள்ளது. அதைவிடவும் இன்னும் ஓயாது தொடர்ந்து கொண்டிருக்கும் பூமியதிர்வுக்குப் பின்னரான குலுக்கங்கள் [ 2 ] தொடர்ந்தும் யப்பானை மீண்டும் ஒரு பூமியதிர்வு வரக்கூடுமோ என்ற பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
யப்பானின் கிழக்குக்கரை நகரான ஷன்டாய் (Sendai) சுனாமிப் பேரலைகளால் முற்றாக துவசம் செய்யப்பட்டுள்ளது. மேலும் யப்பானின்(Japan) கிழக்குக்கரை நகரான புக்காசிமா (Fukushima) வில் அமைந்துள்ள அணு மின் உலையில் நேற்று(12/03/2011) காலை பூமியதிர்வின் பின் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவினால் மிகப் பாரிய வெடிப்பொன்று ஏற்பட்டுள்ளது [ 3 ]. இன்று அங்கேயுள்ள இரண்டாவது அணு உலையும் வெடித்துச் சிதறியுள்ளதாக நம்பப்படுகின்றது [ 4 ]. அந்த பாரிய வெடிப்பினால் அணுமின் நிலையத்தின் 20 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தான கதிர்வீச்சுகள் அந்த நகரைச் சுற்றிலும் பரவியிருக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆபத்தான கதிர்வீச்சு மூலகங்கள் சுற்றுவட்டாரத்தில் பரவியிருக்கக்கூடும் என்ற ஐயத்தில் முதலில் 3 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 5800 மக்களை உடனடியாக வெளியேறச்சொல்லியும் 10 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களை வீடுகளுக்குள் அமைதியாக இருக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். ஆனாலும் பின்னர் 10 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களையும் வெளியேயும் படியும் அதன் பின்னர் அந்த எல்லை தற்போது 20 கிலோமீற்றர் அளவிற்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது [ 5 ]. இந்த அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இன்னும் கணக்கிடப்படவில்லை. ஆபத்தான அணுக் கதிரிவீச்சு மூலகங்கள் சிதறுண்டு இருக்குமானால் அந்த மின்னிலையப் பாவனையை முற்றாக தடை செய்தும் மக்களை வெளியேற்றி 20 கிலோமீற்றர் சுற்றுவட்டாரப் பகுதியை பாவனைக்கு தடைசெய்யவும் வேண்டி வரும். இதனால் 170,000 மக்களை அவர்களின் சொந்த இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கும் அகற்றவேண்டியும் வரும் [ 6 ]. கிரோசிமா நாகசாகி அணுப் பாதிப்புக்குப் பிறகு யப்பானின் புக்காசிமா தற்போது இன்னோர் மோசமான கதிரிவீச்சை எதிர்நோக்கப் போகின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.
சில மணி நேரத்திற்குள் யப்பானை முற்றிலுமாக நிலைகுலைய வைத்துவிட்டது இந்த மிக மோசமான இயற்கை அனர்த்தம். இந்த இயற்கை அனர்த்ததின் மூலகாரணம் என்ன, எதனால் இத்தகைய பாரிய அழிவுகளும் பத்தாயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புக்களும் [ 7 ] ஏற்பட்டன என்ற காரணத்தை தேடுவதே இங்கு நோக்கம். புவியியல் சார்ந்தும் இயற்கைப் பௌதீகவியல் சார்ந்தும் நகரவுள்ளது இந்த ஆக்கம்.
புவியின் பௌதீக அமைப்பு
புவியானது எமக்கு வெளிப் பார்வைக்கு தெரிவது போன்று முற்றிலுமாக கல்லும் மண்ணும் நீரும் சேர்ந்து ஆக்கப்பட்ட ஒரு கோள உருண்டை அல்ல. எமக்கு தெரிகின்ற இந்த கல்லும் மண்ணும் நீரும் சேர்ந்த பகுதியானது புவியின் மேற்பகுதி ஓடு மாத்திரமே. இந்த மேலோடானது சிலிக்கேட்டால் ஆன திடமான ஓர் ஓடாகும். இந்த மேலோட்டின் தடிமன் எல்லாப் பகுதியிலும் சமச்சீராக இல்லை: கடல்களுக்கு அடியில் சராசரியாக 6 கிலோமீட்டரும், நிலப்பரப்பில் 30–50 கிலோமீட்டர் வரையிலும் உள்ளது [ 8 ]. இந்த கடினான மேல் ஓட்டின் கீழே பாகு நிலையில் எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் திரவநிலை குழப்புகள் உள்ளன. அவைபற்றிய விரிவான விளக்கத்தினை கீழ் உள்ள படத்தில் காண்க.
புவியின் மேலோடும் நிலப்பலகைத் தட்டுக்களும்
உண்மையில் மேலோடு எனப்படும் மிகவும் இறுக்கமான புவியின் மேற்பரப்பு ஒரு தனியான ஓட்டுப் பகுதி அல்ல. இந்த மேலோடானது பல வடிவத்திலான நிலப்பலகைத் தட்டுகளாக( Tectonics Plates) பிரிக்கப்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று பொருந்தும் படி இணைக்கப்பட்டு மொத்தமாக ஒரு கோளவடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவை ஒன்றோடொன்று நகர்ந்து மூன்று வகைத் தட்டுக்களால் ஆன எல்லைகளை உருவாக்குகின்றன: அவை முறையே குறுகும் எல்லைகள் : இரண்டு நிலப்பலகைத் தட்டுகள் ஒன்றை நோக்கி மற்றொன்று நகர்தல், விலகும் எல்லைகள் : தட்டுகள் ஒன்றைவிட்டு மற்றொன்று விலகுதல் மற்றும் உருமாறும் எல்லைகள் : இரண்டு தட்டுகள் ஒன்றோடு ஒன்று பக்கவாட்டில் உரசிச் செல்வது என்பனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன [ 8 ]. அவ்வாறு இந்தத் தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று உரசிச்செல்லும் போதும் அல்லது குறுக்கங்களுக்கு உட்படும் போதும் தட்டுகளின் எல்லைகளில் பூகம்பம், எரிமலைகள், மலைகள் உருவாக்கம் மற்றும் ஆழ் கடலடிப் படுபள்ளங்கள் என்பவற்றை சமயத்திற்கு ஏற்ப உருவாகுகின்றன. பொதுவாக இந்த நிலத்தட்டுக்கள் மிகச் சிறிய அளவில் அசைவிற்கு அல்லது நகர்விற்கு உட்படும் போது, அந்த நகர்வுகளால் தட்டுக்களுக்கு இடையில் ஏற்படும் உரசல் அதிர்வுகள் புவியதிர்வுகளாக புவியின் மேலே பயங்கரமாக உணரப்படுவதுண்டு.
யப்பானும் புவியதிர்வும்
யப்பான் நாட்டினை எடுத்துக்கொண்டால் இது பசுபிக் நிலப்பலகைத்தட்டும், பிலிப்பைன்ஸ் நிலப்பலகைத்தட்டும், மற்றும் ரஷ்சியன் நிலப்பலகைத்தட்டும் ஒருங்கிணைகின்ற பகுதியில் வழியே அமைந்திருக்கின்றது. பசுபிக் தட்டானது ரஷ்சியன் தட்டினை நோக்கி ஒரு வருடத்தில் 8.10cm இற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றதாக கணிக்கப்பட்டுள்ளது [ 9 ] [ 10 ]. இதன் காரணமாக இந்த இரு தட்டுக்களும் இணைந்திருக்கின்ற யப்பானின் கிழக்குக் கரையை அண்டிய பகுதியில் கடுமையான புவியதிர்வுகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. பொதுவாகவே பசுபிக் பிராந்தியத்தினை நெருப்பு வளையம்( Pacific Ring of Fire )[ 11 ] என்பதுண்டு. இங்குதான் மிகப்பெரிய அளவிலானதும் கூடுதலானதுமான புவியதிர்வுகளும் எரிமலைக்குமுறல்களும் ஏற்படுவதுண்டு. இந்த நெருப்பு வளையத்தில் முக்கியமாக விளங்கும் பகுதிகளில் ஒன்றுதான் யப்பானின் கிழக்குப் பகுதி. [ 12 ]
வருடத்திற்கு 81mm [ 10 ] தூரத்திற்கு இரசியன் தட்டினை அழுத்திக் கொண்டு உள் நுழையப் பார்க்கும் பசுவிக் தட்டில் ஏற்பட்ட பாரிய அதிர்வுதான், 1900ம் ஆண்டில் இருந்து இன்றுவரை யப்பானின் கிழக்குக் கரையில் அறியப்பட்ட புவியதிர்வுகளில் மிகப்பெரிய அதிர்வினை 12-03-2011 அன்று 8.9 ரிச்சர் அளவில் புவியின் 24.4 km ஆழத்தில் யப்பானின் கிழக்குக் கரையில் ஏற்படுத்திய புவியதிர்வுக்கு காரணமாக அமைந்தது [ 13 ].
கடலடித்தள புவியதிர்வும் சுனாமியும்
நீருக்குள் சிறு அதிர்வினை ஏற்படுத்தினால் அந்த அதிர்வின் சக்தி அலைவடிவில் அலைச் சக்தியாக நீரில் பயணிக்கும். கடலின் அடித்தளத்தில் ஏற்படுகின்ற பாரிய புவியதிர்வுகள் மிகப்பெரிய சக்தி கொண்டவை. அந்த சக்தியினது தோற்றமானது மிகவும் ஆழம் கூடிய கடலடித்தளத்தில் நிகழ்வதனால் ஆழம் கூடிய கடலின் மேற்பகுதியில் மிகச்சிறிய அளவிலான அலை ஒன்றையே ஏற்படுத்தும். அதாவது உருவாக்கப்பட்ட சக்திக்கும் அந்த சக்கியின் அலைநீளத்திற்கும் அது பயணிக்கும் ஊடகத்தின் ஆழத்திற்கும் உள்ள தொடர்பினால் ஆழம் கூடிய கடலடித்தளத்தில் மிகப்பெரிய சக்கி தோற்றம் பெறுவதனால் அது ஆழ்கடலில் மிகச் பெரிய அலைநீளத்தினைக் கொண்டிருக்கும். அலைநீளம் அதிகரிக்கும் போது அந்த அலையின் வீச்சு(amplitude)குறைவாக இருக்கும் [ 14 ]. அதனால் நீண்ட அலைநீளங்கள் உருவாக்கப்படும் ஆழ்கடலில் அலையின் உயரம் குறைவானதாக இருக்கும். ஆனால் ஆழம் குறைந்த கடற்கரைப் பிரதேசத்தினை அந்த சக்கி நெருங்கும் போது அலைநீளம் குறைவடைந்து அலைவீச்சு மிகப்பெரிதாக மாறும். இதனால் ஆழம் குறைந்த கடற்கரைப் பிரதேசங்களில் மிகவேகமாக பல அடி உயரங்களுக்கு அலை எழும்பும். அந்த அலை கொண்டு வருகின்ற சக்கியோ மிகப்பெரியது. தன் முன்னால் அகப்படும் அத்தனை தடைகளையும் துவசம் செய்துதான் அந்த சக்கி அடங்கும்.
யப்பானை 11-03-2011 இன்று தாக்கிய சுனாமி
யப்பானின் கிழக்குக் கரையினைத் தாக்கிய இந்த சுனாமிப் பேரலைகள் 10 000 இற்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்ததுடன் பல மில்லியன் கணக்கான சொத்துக்களையும் ஒரு சில மணிநேரத்தில் துவசம் செய்தும் உள்ளது. யாருமே எதிர்பாராத தருணத்தில் யப்பானை துவசம் செய்த இந்த நிலநடுக்கமும் சுனாமியும் யப்பானுக்கு கொடுத்த இன்னும் ஓர் பயங்கரத் தலையிடிதான் யப்பானின் புக்காசிமா (Fukushima) வில் அமைந்துள்ள அணு மின் உலையில் ஏற்படுத்திய பாதிப்புக்கள். அந்த அணு உலைகளில் ஒன்றில் ஏற்பட்ட குளிரூட்டும் தொகுதி செயலிழந்ததனால் அணு உலை பயங்கரமாக வெடித்துச் சிதறியுள்ளது. அந்த வெடிப்பின் காரணமாக கதிரிவீச்சு மூலகங்கள் அந்தப் பகுதியில் பரவியிருக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இறுதியில் அணுமின் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் உலங்குவானூர்தி மூலமாக மீட்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர்கதிர்வீச்சுப் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. ஏனைய ஊழியர்களிடமும் பாதிப்பு இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இன்று யப்பானில் ஒரு தேசிய பிரச்சனையையே தோற்றிவித்துள்ளது இந்த பசுவிக் நிலத்தகட்டு அசைவுகள். இந்த நிலத்தட்டு அசைவுகளின் காரணமாதத்தான் யப்பான் தேசம் இன்று தேற்றுவார் இன்றி அழுது கொண்டிருக்கின்றது.
சோதனைகளும் வேதனைகளும் யப்பானியர்களுக்குப் புதிதல்ல. இரண்டாம் உலகப்போரில் இரண்டு அணுக் குண்டுகளை தன்மார்பில் தாங்கிய பின்னரும் மடமடவென்று முன்னேறி தலைநிமிர்ந்து காட்டியவர்கள் யப்பானியர்கள். இந்த அழிவுகளில் இருந்தும் இழப்புக்களில் இருந்தும் அவர்கள் துரித கதியில் முன்னேறி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடுவார்கள் என்பது திண்ணம். இறந்த அத்தனை உயிர்களும் அமைதியடையட்டும்.!
ஆதார தொகுப்பு :
1 – Magnitude 8.9 – NEAR THE EAST COAST OF HONSHU, JAPAN 2011 March 11 05:46:23 UTC
2 – 11/03/2011 இல் 8.9 ரிட்டர் அளவில் ஏற்பட்ட புவியதிர்விற்குப் பின்னரான காலத்தில் இருந்து 14-03-2011 வரையில் யப்பானின் கிழக்குக் கரைப்பகுதியான ஹொன்ஷு (HONSHU, JAPAN) பகுதியில் தொடரும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள்
3 – புக்காசிமாவின் முதலாவது அணு உலை வெடித்துச்சிதறியுள்ளது.
4 – புக்காசிமாவின் இரண்டாவது அணு உலை வெடித்துள்ளது என ஐயப்படுகின்றது.
5 – புக்காசிமாவின் அணு உலை வெடிப்பின் விளைவுகள்..
6 – புக்காசிமாவின் அணு உலை வெடிப்பும் தாக்கமும்..
7 – 10000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்..
9 – நிலத்தட்டுக்களின் அசைவுகள்..
10 – நிலத்தட்டுக்களின் நகர்வியக்க வேகம்..
11 – நெருப்பு வளையம்.
12 – யப்பானின் கிழக்குக் கடற்கரையும் புவியதிர்வுகளும்.
13 – 11/03/2011 இல் யப்பானின் நிலநடுக்கம்.
14 – சுனாமியும் அலைக்கொள்கையும்.
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
தெளிவான அருமையான அலசல் சுபானு, இயற்கைக்கு எதிராக நாம செய்யும் செயல்களுக்குத் தான் இந்த விளைவுகள்.
Geology Lecture notes தமிழ் படித்தது போல இருக்கின்றது. விரிவான ஆய்வு, கூடவே உசாதுணை பக்கங்களை இட்டது சிறப்பு.
எல்லா கடலடி பூகம்பங்களும் சுனாமியை உருவாக்குவதில்லை. அதுடன் பூகம்பங்கள் மட்டும் தான் சுனமியை உருவக்கும் என்றும் இல்லை. கடலினடியில் எற்படும் பாரிய மண் சரிவுகளும் சுனமியை எற்படுத்தவல்லன. பூகம்பத்தால் கடலின் தரை பெரியளவில் இடம்பெயருமெனில் மட்டும் சுனாமி உண்டகும்.
மிக தெளிவான ஆய்வுக் கட்டுரை. பூமிப் பந்து தனக்குள் மாற்றம் கொண்டுவந்து தான் நம்மை இங்கு வாழும் வசதிகளுடன் உயிர்களைக் கொண்டுவந்தன. இப்பொழுது இந்த மாற்றமே பேரிடியாக அமைந்துவிட்டது.
எங்கு நம் மீட்பு பணியை துவங்குவது என்பதை யோசிக்ககூட முடியாத அளவிற்கு கேள்விக்குறியாக உள்ளது இந்நாடு.
தங்களின் ஊடுருவிய ஆய்வு நிறைய விஷயங்களைத் தெளிவு படுத்தியுள்ளது. நன்றி
மிகச் சிறந்த தெளிவான ஆய்வு சுபானு. இந்த ஆய்வினூடு நிறைய விடையங்களை அறிந்தேன். நன்றி