மேகத்தில் இருந்து கால் தவறி ஒரு மழைத் துளி விழுந்து விடுகின்றது. கால்தவறித்தான் விழுந்தாலும் அடுத்த சில கணங்களில் சுதாகரித்துக்கொண்டு மெல்ல கீழ் நோக்கி தலையைத் திருப்புகின்றது அந்த துளி.
அம்மாடியோவ்.. என்ன ஒரு ஆழத்தில் விடுந்துவிட்டேன்.. என் கதை இத்தோடு முடிந்ததுதான். என எண்ணும் போது கீழ் இருந்து தன்னை யாரோ பலமாக இழுப்பதனை உணர்கின்றது அந்த மழைத்துளி. எத்தனை பலங்கொண்டும் எதிர்த்தும் முடியவில்லை. துளியின் வேகம் அடுத்த கணங்களுக்குள் பலமடங்காகத் தொடங்குகின்றது. கைப்பற்றி தப்பிக்கவும் ஏதுமற்ற அந்தர நிலையில் விழுந்து விட்டதை உணர்கின்றது துளி. வாய்திறந்து கத்திப் பார்த்தும் பயனில்லை. தன்னைக் காப்பாற்ற எவரும் வரக்கூடிய இடத்தில் தான் இல்லை என்பதனை தெளிவாக உணரத்தொடங்கியது துளி. மேலே தலைநிமிர்ந்து பார்த்தது துளி. தான் சுகமாக வசித்த அந்த மேகவீடு தன்னை விட்டு வேகமாக விலகிக்கொண்டிருப்பது தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தன் பார்வையில் இருந்து மறையத் தொடங்குவதும் புரிந்தது. கண்கள் மெல்ல இருளத் தொடங்கியது. மரண பயம் அந்தத் துளியை முழுவதுமாக அணைத்துக் கொண்டது. இதயம் அசுர வேகத்தில் குடித்து கொண்டிருந்தது. அதனைவிட வேகமாக துளி பாதாளம் நோக்கி விழுந்து கொண்டிருந்தது.
ஓடிக் கொண்டிருந்த பேருந்தின் யன்னற் கண்ணாடியினை மெல்ல விலக்கி, மெதுவாக வெளியே தலையினை நீட்டினாள் வாசுகி. அப்போதுதான் பெய்து ஓய்ந்திருந்த மழையில் எஞ்சிய துளிகள், மேகத்திலில் இருந்த தடக்கி விழுந்து காற்றில் மிதந்து அவளின் முகத்தில் இறங்கி இளைப்பாறத் தொடங்கின. கண்களை மெல்ல மூடி நீளமாக ஒரு சுவாசத்தினை இழுத்தாள். சில்லென வீசிய காற்றுடன் புதிய ஓட்சியன் அவள் நுரையீரலில் ஆழமாக இறங்கியது. இதயத்தின் அருகாமையில் புதுக் காற்றின் குளிர்ச்சியை உணர்ந்தாள் வாசுகி. மனதில் பூரித்திருந்த மகிழ்ச்சி அவள் முகத்தில் புன்னகையாகப் பூத்திருந்தது.
இன்று காதலர் தினம். சாயங்காலம் ஓருக்கா ஈஸ்ட்கோஸ்ட் பாக்கிற்கு வருவியா வாசுகி. சங்கரிடம் இருந்து வந்த குறுஞ்செய்திதான் இத்தனை மகிழ்சிக்கு காரணம். மூன்று வருடங்களாக சங்கரினை மனதிற்குள் காதலித்துக் கொண்டிருந்த வாசுகிக்கு சங்கரிடம் இருந்து வந்த அந்த குறுஞ்செய்தி ஏன்னமோ அவள் மனதில் பெரும் சந்தோசப் பிரளயத்தினை ஏற்படுத்தி இருந்தது. இன்னும் என்னைக் காதலித்துக் கொண்டு இருப்பானா? இல்லை வேறு யாராவது அவன் வாழ்க்கையில் வந்திருப்பார்களா? அன்றே அவன் காதலைச் சொல்லும் போது ஏற்றுக் கொண்டிருந்தால் இந்த பிரிவும் தவிப்பும் ஏற்பட்டு இருக்காதல்லவா. அவள் மனது அவளையே கேள்விகளால் துழைத்தெடுத்தது. எதற்காக என்னைப் பார்க்க வரச்சொல்கின்றான். என்னைப் போலவே அவனும் இன்னும் என்னைக் காதலிப்பானா? மீண்டும் அந்தக் குறுஞ்செய்தியினைப் படித்துக் கொண்டாள் வாசுகி. எதற்காக மூன்று வருடங்களின் பின்னர் அதுவும் காதலர் தினத்தில் என்னை வரச்சொல்கின்றான்!. சந்தேக சலசலப்புக்கள் நீங்கி மீண்டும் காதல் தந்த சந்தோசம் அவளை அணைத்துக் கொண்டது.
திடீர் என ஏதோ ஓர் பஞ்சுக் குவியல் தன்னைத் தாங்குவது போல உணர்ந்தது துளி. சடசடவென தன் வேகம் குறைவதையும் உணர்ந்தது மழைத்துளி. இறுக மூடியிருந்த கரங்களை மெல்லத் திறந்து யார் அது எனப் பார்க்க விருப்பியது மழைத்துளி. என்ன ஒரு மென்மையான ஸ்பரிசம் அது. ஜில் என்ற குளிர்ச்சி. அடடா.. யாரது..என மனதுக்குள் எண்ணும் போது.. “நான்தான் காற்று” என்றது துளியின் காதுகளுக்குள் மெல்ல கிசுகிசுத்தபடி துளியை தன் இறகுகளுக்குள் தாங்கியபடி காற்று. மழைத்துளிக்கு இது புதிது. மனதில் புதிதான இனம் புரியாத சந்தோச உணர்வுகளுக்குள் சிக்குண்டது அந்தத் துளி. மரணபயம் மறந்து அதன் மனதெங்கும் மெல்ல மெல்ல சந்தோசத் தென்றல் வீசத் தொடங்கியது. இதுவரை இப்படியான ஒரு தீண்டலை அந்ததுளி அனுபவித்தில்லை. காற்றின் விரித்த சிறகுகளுக்குள் கட்டுண்டு கிடக்க துளியின் மனது விருப்பப்பட்டது. முகத்தில் பயத்தின் ரேகைகள் மறைந்து மகிழ்சியின் ஸ்பரிசங்கள் பரவத் தொடங்கியது. எங்கிருந்தோ வந்து அணைத்துக் காப்பாற்றிய அந்த காற்றிடம் மழைத்துளியின் மனதில் விருப்பம் வளரத் தொடங்கியது.
என்ன மேகத்தில் இருந்து விழும் போது பயந்து விட்டாயா? எனக் கேட்டது காற்று. சின்னப்புன்னகை பதிலாக வந்தது மழைத்துளியிடம் இருந்து.
“நீ விழும்போது பாரத்தேன்.வைரம் போல மின்னிய உன் முகம் என்னை உன்னிடத்தே இழுத்து வந்தது. உண்மையைச் சொல்வதென்றால் உன்னைப் பார்த்த அந்த நிமிடத்திலேயே என் மனம் என்னிடம் இல்லை..” என காதலை சொல்லாமல் சொல்லியது காற்று. மழைத்துளியின் முகத்தில் பரவசம். புரியவில்லை. எல்லாம் கனவா! எங்கிருந்தோ வந்த இந்தக் காற்றின் மேல் எதற்கு இத்தனை ஈடுபாடு. புரியாவிட்டாலும் அதன் மனது காற்றின்மேல் இலயித்துவிட்டது. கண்கள் புதுக் காட்சி காணத் தொடங்கியது. இதுதான் காதலா..
பேருந்தில் இருந்து இறங்கி நேராக ஈஸ்ட்கோஸ்ட் பாக்கினுள் சென்றாள் வாசுகி. அவளுக்காக காத்திருந்தான் சங்கர். ஓடிச் சென்று அவனை அணைக்க வேண்டும் போல இருந்தது. முடியவில்லை அவளாள். ஏதோ ஒன்று தடுத்தது.
சரியாக மூன்று வருடங்களின் பின்னர் சங்கரை சந்திக்கின்றாள். அவளுடன் பள்ளியிலிருந்து ஒன்றாகப் படித்தவன் சங்கர். பின்னர் உயர்கல்விகற்கும் போதும் ஒன்றாகத்தான். ஆரம்பத்தில் இருந்தே நல்ல நண்பனாக அவளோடு பழகிவந்தவன், ஒருநாள் அதுவும் ஒரு காதலர் தினத்தில் இதே ஈஸ்ட்கோஸ்ட் பாக்கினில் வைத்து வாசுகியினைக் காதலிப்பதாகச் சொன்னான். அதுவரை வாசுகி அப்படி காதலனாக அவனை நினைத்திருக்கவில்லை. இதுவரை நல்ல நண்பனாகப் பழகிவந்தவன் திடீர் என்று காதலிப்பதாகச் சொன்னதும் சட்டென்று கோபப்பட்டு விட்டாள் வாசுகி. எக்கச்சக்கமாக பேசியும் விட்டாள் வாசுகி.
அதன் பின்னர் சங்கர் அவளுடன் எந்தத் தொடர்பையும் செய்ய விரும்பாது அவுஸ்ரேலியா சென்றுவிட்டான். எந்த விதமான தொடர்புகளும் அவளோடு இல்லை. அவனை அன்று அவள் அப்படி கோபித்துப் பேசியதன் பின்னர்தான் காதல் அவளை திருப்பித் தாக்கத் தொடங்கியது. சங்கரின் பிரிவு அவளை நிமிடந்தோறும் அவனை நினைக்கவைத்தது. அவளை அறியாமலே அவளுக்குள் அவன் முழுவதுமாக நிறையத் தொடங்கினான். காதல் என்றால் என்ன என்பதனை சங்கரின் பிரிவின் மூலம் உணர்ந்து கொண்டாள். காதலின் மென்மையினை கனவிலும் உணரத்தொடங்கினாள்.
“எப்படி இருக்கிறாய் வாசு..” வாசு என்றுதான் சங்கர் அவளைக் கூப்பிடுவான். அவன் அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் அழகே தனிதான். அதில் தனிக் கனிவே இருக்கும். அதிலேயே மயங்கிவிட்டாள் வாசுகி.
“நீ எப்படிடா இருக்காய்..”
“என்ன யோசிக்கிறாய்..?”
“இல்லை புதுசா இருக்கு.. என் மனசும் என்னிடம் இல்லை..”
“என் கூடவே எப்போதும் இருப்பாயா..?” மழைத்துளியிடம் ஆசையாகக்கேட்டது காற்று. மெல்லப் புன்னகைத்து ஆம் எனத் தலையாட்டியது மழைத்துளி.
காதல் எந்தக் கணத்தில் தோன்றும் என எவருமே அறிந்தவரில்லை. திட்டமிட்டு செயற்பட்டுக் காதலை வெற்றி கொள்ள காதல் ஒன்றும் யுத்தங்கள் அல்ல. நெஞ்சுக்குள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு இராகம் அது. அந்த இராக ஸ்வரம் எதுவென தெரிந்தவர் மெல்ல மீட்டும் போது மனம் எங்கும் தீயாக பரவி இரு இதயங்களையும் குளிர்விக்கும் அது. குளிர்நீரிலும் சுடவைக்கும், சுடும் நீரிலும் குளிரவைக்கும். மழைத்துளியினுள் உறங்கிக் கொண்டிருந்த மோகனத்தினை மெல்லக் காற்று மீட்டியதும், மடைதிறந்த வெள்ளம் போல தழும்பியது மழைத்துளியின் மெல்லிய உணர்வுகள். காதலின் கைகளுக்குள் சரணடைந்தது.
“இன்னும் உன்னைக் காதலித்துக் கொண்டிருக்கின்றேன்..” உடனடியாக வந்தது சங்கரிடம் இருந்து.
“நீ என்னைக் காதலிக்கும் வரைக்கும்… எத்தனை காலங்கள் சென்றாலும் உனக்காகக் காத்திருப்பேன் வா..சு…”
வாசுகியின் கண்கள் கண்ணீரினால் நிரம்பியது. இது துக்கத்தில் வெடிக்கும் அழுகை அல்ல. நெஞ்சு முழுக்க ஆனந்தத் தாண்டவம் ஆடியது அவளுக்குள் குடியிருந்த அவன் மேலான காதல். அப்படியே இறந்துவிடலாம் எனத் தோன்றியது அவளுக்கு. காதல் அவளை அந்த அளவிற்கு அவன்மேல் பைத்தியமாக்கி வைத்திருந்தது. அப்படியே கைகளால் கண்ணை மறைத்துக் கொண்டு தரையில் தலைகுனிந்து முழங்காலில் உற்காந்தாள்.
“என்னடா வாசு..” அவனும் அவள் அருகில் மெல்ல முழங்கால் நிலத்தில் பதிய உற்க்காந்து அவன் கைகளால் அவள் இரு கைகளையும் விலக்கினான். முகத்தை அவள் முகத்தினருகே வைத்து மீண்டும் “என்னடா வா..சு…” என்றான்.? அவன் மூச்சுக்காற்றின் வெப்பம் வாசுகியை நினைகுனிய வைத்தது.
இப்படியே வெட்கத்தில் தலைகுனிந்து பார்தது மழைத்துளி. காற்றின் மேல்கொண்ட காதலால் தன்னை மறந்திருந்த துளி, அப்போதுதான் தான் தரைக்கு மிகவும் பக்கமாக வந்துவிட்டதைப் பார்த்து. இறுக காற்றின் இறகுகளைக் கட்டியணைத்துக் கொண்டது.
அதற்கு மேலும் தாங்காதவளாய் வாசுகி அவன் இரு கைகளையும் தன் கைகளோடு அணைத்துக் கொண்டு. “என்னை விட்டு என்றும் பிரியாதேடா சங்கர்” என்றாள்.
அவளின் அந்தச் சொற்கள் முடிவதற்குள் அவள் முழுவதுமாக சங்கரின் அணைப்பிற்குள் அடைக்கப்பட்டாள்.
“உன்னை என்றும் என்னுடனே சேர்த்திருப்பேன்.. இருவரையும் இனிமேல் யாருமே பிரிக்க முடியாது..” என்றது காற்று.
அப்படியே அவள் நெற்றியில் தன் இரு இதழ்களையும் பதித்தான் சங்கர். அவள் கண்களை மெல்லத்திறந்து பார்த்தாள் வாசுகி.
இறுக கண்களை மூடிக்கொண்டது மழைத்துளி. அடுத்த சில கணத்தில் அந்தத்துளி ஒரு மென்மையான வெப்பம் நிறைந்த பகுதியில் விழுவதை உணர்ந்தது. சில நொடிகளுக்குள் அந்தத்துளியினை காற்று தன்னோடு சேர்த்துக்கொண்டது. அந்தத் துளி காற்று உருவம் தாங்கி காற்றுடன் சேர்ந்து கொண்டது. காற்று தன்னோடு ஒன்றாகக் கலந்துவிட்ட மழைத்துளியை சேர்த்துக் கொண்டு இதமான சாருகேசியில் இளந்தென்றலாக வீசத்தொடங்கியது. ஒரு காதல் இசையாக காவியமாகிக் கொண்டிருந்தது.
சங்கர் இதழ் பதித்த நெற்றியில் திடீர் என ஒரு குளிர்ச்சியான மழைத்துளி வந்து விழுந்ததை உணர்நதாள் வாசுகி. அவள் கண்களில் ஒரு நிம்மதியான புன்னகை. அவள் உடலின் வெப்பத்தில் அந்த துளி நீராவியாக கரைந்து விட்டது. அவள் காதுகளுக்கு அருகில் சாருகேசியின் மெல்லிய சரணங்களை யாரோ இசைப்பதை உணர்ந்தாள் வாசுகி. வேறு யாரும் அல்ல. வா.. சு…. என சங்கர் அவள் காதுகளுக்கு அருகில் உரைத்தது அங்கே சாருகேசியாக சங்கதி செய்தது. மூன்று வருடக் காதல் அங்கே இனிக்கும் தருணங்களை எட்டிக் கொண்டிருந்தது.
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
காதலர் தின ஸ்பெஷல் பதிவா? கலக்கல்
super up man!especially the way you end the story…the last para…wonderful man..BTW im newto your site. Keep writing man!!!
BTW im aathithya.. forget to metion the name. 🙂
@சி பி செந்தில் குமார்
ம்.. இந்த ஆண்டுக் காதலர் தினத்தினை ஏதாவது வித்தியாசமாக பதிய வேண்டும் எனத்தான் இந்தக் கதையினை எழுதியிருந்தேன். உங்கள் உங்களின் வரவுக்கும் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஆதித்யா. 🙂
நன்றி ஆதித்யா.