வரலாற்றின் சாலையில் இருந்து ஈராயிரத்து பத்து கழிந்து செல்வதற்கான தூரம் இன்னும் சற்றுத்தான் இருக்கின்றது. கடந்து வந்த பாதையில் கண்ட சந்தோச சாரல்கள், சந்தித்த மனிதர்கள், புகட்டிய பாடங்கள், தித்தித்த நிமிடங்கள், கனத்த நொடிகள், பெற்ற வெகுமதிகள், வலித்த விபத்துக்கள், விபத்துக்கள் தந்த இழப்புக்கள்.. இன்னும் எத்தனையோ எத்தனையோ சங்கதிகள் எல்லாம் சிறிது நேரத்தில் இந்த ஈராயிரத்து பத்து என்னும் சாலையின் பணயக்குறிப்புகளாக பதியப்படப் போகின்றன. புதிதாக இன்னும் ஓர் புதிய சாலை எம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. ஈராயிரத்து பதினொன்று நம்மை வரவேர்க்கின்றது. அந்த சாலையில் உங்களோடு இந்த ஊஞ்சலில் பயணிக்கப்போகின்ற மகிழ்ச்சியினை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.
சிங்கப்பூரின் அழகிய மரினா(Marina Bay) கடற்கரையை நோக்கிய வண்ணம் அமைந்திருக்கும் பாக் ரோயல் ஹோட்டேலின் 15ம் மாடியில் இருந்து சிங்கப்பூரின் அழகிய சாலைகளையும் கடற்கரையையும் பார்க்கும் போது… என் எண்ணங்கள் இந்தக் கணத்தில் பின்நோக்கிச் செல்கின்றன…
இலங்கைத்தீவின் வடமாகாண யாழ்ப்பாணத்தில் உள்ள அழகிய வேலணைக் கிராமத்தில் எண்பத்தி ஐந்தாம் (1985)ஆண்டு பிறந்து, வெறும் ஐந்தே வருடங்களில் தொண்ணுறில்(1990) பிறந்த ஊரைவிட்டு இடம் பெயர்ந்து யாழ்பாணத்தில் குடியேறினேன். யாழ்மக்கள் சந்தித்த முதலாவது உள்நாட்டு “அகதி” வாழ்க்கை அது. அடுத்த ஐந்து வருடங்கில் தொண்ணூற்று ஐந்தில்(1995) யாழ்ப்பாணத்தை விட்டும் இடம்பெயரவேண்டிய சூழல் உருவானது. மீண்டும் ஓர் இடம்பெயர்வு தென்மராட்சியினை நோக்கி. சில காலங்களின் பின்னர் யாழ்பாணம் மீண்டு அங்கிருந்து மொறட்டுவப் பொறியியல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி ஈராயிரத்து ஐந்து(2005) முதல் கொழும்பில் வாழ்க்கை. பொறியியல் கல்வி முடிந்ததும் ஈராயிரத்து ஒன்பதில்(2009) துருக்கிப் பயணம். அதன்பின்னர் ஈராயிரத்துப் பத்தின்(2010) ஆரம்பத்தில் இருந்து சிங்கப்பூர் வாழ்க்கை. இன்று இந்த அழகிய சிங்கப்பூரில் இருந்துகொண்டு தவழ்ந்து, நடந்து, ஓடி வந்த பாதைகளை சற்று பின்நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்… நாளை விடியப்போகும் ஈராயிரத்துப்பதின் ஒன்றின்(2011) பின்னர் எங்கிருப்பேன் என்று தெரியாது. தமிழனாய்ப் பிறந்ததனால் நிட்சயமாக ஓடிக் கொண்டுதான் இருப்பேன்…
மரினா கடற்கரையில் பட்டுதெறித்துவரும் சூரிய ஒளிக்கதிர்கள் மீண்டும் என்னை இங்கே இழுத்து வருகின்றன…
என் எண்ணங்களையும் என் குரலின் மறுவடிவத்தினையும் சுமந்து மூன்று வருடங்களாக ஓய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கின்றது இந்த ஊஞ்சல். என் பல்கலைக்கழகக் காலத்தினில் தொடங்கி இன்றுவரை. சின்னச் சின்ன கவிதைகள், கதைகள், முடிக்கப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்கதைகள், எம் இனம் மீதான இலங்கை அரசின் அடக்குமுறை மீதான கோபங்களும் இயலாமையின் ஆற்றுகைகளும் இங்கே இந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் “ஊருக்கு நல்லது சொல்வேன்” ( – மார்ச் 4, 2007) இல் தொடங்கிய இந்த ஊஞ்சல் பயணத்தில் கிடைந்த நல்ல நண்பர்கள், அக்கறையுள்ள நலன்விரும்பிகள் என நான் சாம்பாதித்த நல்ல உள்ளங்கள் ஏராளம். இந்தச் சொந்தங்கள் எல்லாம் எனக்கு இந்த ஊஞ்சல் பயணத்தில்தான் கிடைத்தது. வந்தியத்தேவன், லோசன், வலசு-வேலணை, கானாபிரபா, மதுவதனன் மௌ, நிமல், கார்த்தி, சாயினி, சுபாங்கன், கனககோபி, சிந்து, புல்லட், பிறைதீசன், காருண்யா, சந்ரு, ஆரபி, ஜெயமே, சிந்தனை சிறகினிலே,பால்குடி, ஆதிரை என நீளும் கணக்கற்ற நண்பர்களின் பட்டியல்.. இந்த நண்பர்கள் எல்லாம் என் ஊஞ்சல் தந்த சொந்தங்கள்.
நண்பன் பிறைதீசனின் அலைபேசி அழைப்பு மீண்டும் என்னை நிகழ்காலத்திற்கு அழைத்து வருகின்றது. இன்று இரவு ஆங்கிலப் புதுவருட கவுண்டவுண் பார்க்க சென்தோச தீவுக்கு எத்தனை மணிக்குப் போவமடா என்கின்றான்.. சென்தோச ஒன்பது மணிக்கு போய்விட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மரிமா(Marina Bay) கடற்கரைக்கு சென்று போய் கவுண்டவுன் பார்ப்போம் என்கின்றான். சரி என்கின்றேன். அலைபேசியினைத் துண்டிக்கப்படுகின்றது.
இந்த ஈராயிரத்துப் பத்தில் ஊஞ்சலில் ஆடிய சில பதிவுகள்.மீள இங்கே.. இலங்கையின் தேர்தல் களத்தில் ஒரு கரகாட்டம், வானம் வசப்படும் , என்னை அடிச்சது இந்தக் காதல், நீ நாளை வருவாயோ? , அன்று வேங்கியில் இன்று…. ஊஞ்சலில் ஈராயிரத்துப் பத்தில் உங்களுடன் கூட நடந்துவந்த மகிழ்ச்சியோடு ஈராயிரத்துப்பதின் ஒன்றினை வரவேர்க்கக் காத்திருக்கின்றேன்.
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வாண வேடிக்கைகளோடு பிறக்க இருக்கின்ற ஆங்கிலப் புத்தாண்டில் அனைவருக்கும் சுகமும் மகிழ்சியும் பொங்கும் வண்ணம் நினைத்ததெல்லாம் கை கூடவேண்டும் என்ற வாழ்த்துக்களுடன் – சுபானு. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Categories: சுயதம்பட்டம், வாழ்த்துக்கள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
உங்களைப் போன்ற உறவுகளை நட்பாகப் பெறுவது பெருமை தரும் விஷயம். சிங்கை வாசம் பற்றி இப்போது தான் அறிந்தேன் 2 முறை வந்தும் சந்திக்கும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டேன்
2011 உங்களுக்கு எல்லாச் சுகங்களையும் தரட்டும்
உங்களுக்கும் இனிய ஆங்கிலப்புதுவருட வாழ்த்துகள் அண்ணா 🙂
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்துகள்…
கானா பிரபா, Subankan, கார்த்தி, நிமல் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்…