என்ன சொல்லுகிறீர்கள் மந்திரியாரே ?
ஆம் மகாராணி! நமது மன்னர் போரிலே வெற்றி பெற்று வேங்கிநாட்டு மன்னனை கொன்று படையினரை புறமுதுகு காட்டி ஓட விட்டு விட்டார். பரிவாரங்களுடன் மன்னர் அரண்மனைக்கு வந்துகொண்டிருக்கின்றார்.
என் மனம் இப்போதுதான் அமைதியுறுகின்றது மந்திரியாரே. மிக்க நன்றி! என் மனமுகந்த தகவலை விளம்பியதற்கு. வாருங்கள் சேடிப் பெண்களே மன்னனை அரண்மனை வாசலிலேயே வைத்து ஆரார்த்தி எடுத்து வரவேற்போம். என்று அந்தப்புரத்து சேடிப்பெண்கள் சதிதம் அரண்மனை வாசலுக்கு விரைந்தாள் சோழ அரசின் மகாராணி மரகதவல்லி. கூடவே முதலமைச்சர் விருதரும் அரண்மனை வாசலுக்கு விரைந்தார்.
சோழர் குல திலகம், பதினாறு விழுப்புண் கண்ட மாவிரர், வேங்கியை அடக்கிய தஞ்சாவூர்ப்புலி, மாமன்னன் விஜயராய சோழர் அரண்மனைக்கு வந்துகொண்டிருக்கின்றார். கட்டியம் கூறுபவன் வெற்றியைப் பறையடித்துக் கூவினான்.
சகுந்தலா தங்கச்சி தொட்டிலில பசியால அழுகிறாளடி கொஞ்சம் தொட்டில ஆட்டிவிடுமா.. இடம்பெயர்ந்து சொத்துக்ளை எல்லாம் இழந்து அகதிகள் புனர்வாழ்வு முகாம் என்று பெயரிடப்பட்ட சிறு கூடார இராச்சியத்தின் முதல் பெண்மணி இந்தப் பார்வதி. பார்வதியோ தொட்டிலில் ஆடும் பிள்ளை பிறந்த போது படுக்கையில் விழுந்தவள்தான். ஒழுங்கான சத்துணவு கிடைக்காததால் இன்னும் குணமாகாமல் தொட்டுத் தொட்டு இழுத்துக் கொண்டிருந்தது பெயர் தெரியா வருத்தங்கள் அவளை. பிறந்த பிள்ளையை கண்ணைப்போலப் பாத்து வருபவள் மூத்த மகள் சகுந்தலா. கடந்த ஆவணி மூன்றாம் திங்களோடு பதின்நான்கு முடிந்தது சகுந்தலாவிற்கு. பார்வதியின் குரல் கேட்டு அடுப்பங்கரையில் சமையலுக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த சகுந்தலா தொட்டிலை நோக்கி ஓடினாள்.
சிறிது நேரம் தொட்டிலை ஆட்டித் தூங்க வைத்தாள். அப்பவை ஏனம்மா இன்னும் காணல.. எனக்கும் பசிக்கிறது அம்மா. தங்கச்சியும் பசியால அழுது அழுது தூங்கிவிட்டாள் அம்மா.. அப்பா வந்தாதாம்மா அடுப்பில உலை வைக்கலாம் அம்மா. என்று பார்வதியிடம் கூறினாள் சகுந்தலா.
ஏன் இவ்வளவு நேரம் ஆகின்றது என்று தெரியவில்லையடி. இந்த நேரத்திற்கெல்லாம் வழமையா வந்து விடுவார். அவருக்கும் தெரியும். இங்கே நாங்கள் காத்துக்கொண்டிருப்போம் என்று. சாயந்தரம் வீட்ட விட்டு போகேக்க சொல்லித்தான் விட்டனான், உலைவைக்கணும் என்றா நீங்க வந்துதான் ஆகணும் ஏன்று…
அரண்மனை வாசலுக்கு வெற்றிப் பறை முழங்க பரிவாரங்களோடு வந்த விஜயராய சோழனை ஆரார்த்தி எடுத்து வரவேற்றாள் மரகதவல்லி. அவள் முகத்திலே பூரிப்பு. நெற்றியிலே திலகமும் இட்டாள்.
மகாராணி உனக்காக வேங்கி நாட்டு கஜானாவையே கொண்டு வந்திருக்கின்றேன். முதலில் அந்த வேங்கியின் பரம்பரைச் சொத்தான மாணிக்க மாலையை வாங்கிக்கொள். என்று கையில் இருந்த மாணிக்க மாலையை மரகதவல்லிக்கு அணிவித்தான் விஜயராய சோழர்.
மரகதவல்லியின் முகத்தில் பளிச்சிட்டுப் பிரகாசித்து பலகோடி மின்னல்கள். மன்னவா தங்களின் மனைவியாக என்ன தவம் செய்தேனோ.. என்று சோழனின் முன்னால் தலைகுனிந்து நாணினாள்.
சுற்றியிருந்த பரிவாரங்கள் எங்கும் மன்னனையும் மகாராணியையும் போற்றி கோசமிட்டார்கள்.
தொட்டிலில் கிடந்த குழந்தை மீண்டும் பசியெடுத்து அழ ஆரம்பித்தது. எத்தனை முயன்றும் சகுந்தலாவால் அந்தக் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. குழந்தை பசியால் அழுவதைப் பார்த்து சகுந்தலா தவித்தாள். இருவரையும் பார்த்து பார்வதி தவித்தாள். என்ன வாழ்க்கை இது. ஒருவேளை உணவுக்காக காத்திருக்க வேண்டியிருகின்றதே. என்ன பாவம் செய்தன என்குழந்தைககள். எங்களுக்கா எத்தனை காலம் தான் அவரும் கஸ்டப்படுகின்றார்.
தன் கட்டை விரலை குழந்தையின் வாயினில் வைத்து மெல்ல அழுத்திவைத்தாள் சகுந்தலா. பாவம் குழந்தை தன் வாயருகே இருப்பது வெறும் கட்டை விரல் என்று புரிந்து கொள்ளக்கூடிய பகுத்தறி அதற்கு இன்னும் வளரவில்லை. முட்டி முட்டிக் குடித்தது.
அப்பா எங்கே போவதாகச் சொல்லி போனவர் அம்மா?
எங்கே நமது இளவரசி காஞ்சனா? அவளுக்காக வேங்கி நாட்டு அரண்மனையில் இருந்து பலவண்ண முத்து மாலைகள் கொண்டு வந்துதிருக்கின்றேன். அவள் மிகவும் சந்தோசப்படுவாள்! எங்கே அவள் என்று மகளைத் தேடினார் விஜயராய சோழர்.
அதற்கிடையில் அமைச்சர் விருதர் குறுக்கிட்டு, மன்னா இந்தப் படையெடுப்பால் நம் அரண்மனைக்கு எண்ணிலடங்க செல்வம் வந்து குவிந்திருக்கின்றது என்று சொல்லுங்கள்! என்றார்.
ஆம் அமைச்சரே.. நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, வேங்கிநாட்டு மக்கள் இவ்வளவு செல்வங்களை வைத்திருபார்கள் என்று. வேங்கி படையினரை தேடித் தேடி நமது படையினர் அழித்து விட்டு வேங்கி மக்களை நமது நாட்டிற்கும் தென் வேங்கியிற்கும் இடையில் பவானி என்றொரு குக்கிராமம் இருக்கின்றதல்லவா! அங்கே அவர்களை தடுத்து வைத்துவிட்டார் நமது சேனாதிபதி. பின்னர்தான் நாம் வேங்கியின் மாடவீதிகளில் நுழைந்தோம். அங்கே நமது படையினருக்காக நல்ல வேட்டை காத்திருந்தது தெரியுமா! நாம் படை வேங்கியின் மாடவீதிகளில் நுழைந்ததும் அந்த மாடவீதி ஆளரவம் அற்று வெறிச்சோடிப் போய் இருந்தது. அப்புறம் என்ன நமது படையினர் வீடு வீடாக நுழைந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த செல்லங்களை அள்ளிவிட்டார்கள். படைவீரர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி கொட்டாட்டம். பாருங்கள் அமைச்சரே நமது படையினர் வீடுகள் எல்லாம் திருவிழா கொண்டாட்டங்கள்.
மாடவீதியை விலக்கி அரண்மனையை அடைந்தால் அரண்மனைக் கஜானா எனக்காக காத்திருந்தது தெரியுமா! என்ன செல்லம் அங்கே.. அள்ளி அள்ளித் தந்துவிட்டான் எனக்கு அந்த வேங்கி மன்னன். இறந்தும் தொடுத்தான் வேங்கி!. நமது கஜானா பல்கிப்பெருகி விட்டது தெரியுமா விருத்தரே…!
மன்னா நீர் வாழ்க.. ! விருத்தரின் முகஸ்துதியால் மன்னர் முகத்தின் பிரகாசம் பலமடங்கு கூடியது. அப்போது அங்கே படைக்கல சேனாதிபதி உள்ளே நுழைந்து விஜயராயனை வணங்கி
மன்னா வேங்கி நாட்டு மக்களுக்கு அத்தியவசிய தேவைகளை நமது படையினர் கவனித்து வருகின்றார்கள். அவர்களை நாளை விடுவித்து விடலாமா என்று கேட்டார் ?
விருத்தர் குறுக்கிட்டு இல்லை! இப்போது உடனடியாக செய்யவேண்டியது நமது படையின் ஒரு தொகுதி வேங்கி அரண்மனையில் தங்கியிருக்கட்டும். அவர்கள் அங்கு மேலும் பரிட்சையமாகியவுடன் மெல்ல மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக மக்களை மீளக் குடியேற்றுவோம். அப்போதுதான் வேங்கியினை நாங்கள் முழுமையாக நிர்வகிக்க முடியும். நமது கட்டுப்பாட்டில் அந்த வேங்கி எப்பொதும் இருகும். இன்னொரு வேங்கி மன்னரோ அல்லது உறுதியான இராஜ பரம்மரையோ தோன்றாது. அதுவரை வேங்கி மக்களை இப்போது தடுத்துவைத்துள்ள இடங்களிலேயே தடுத்து வைத்திருங்கள்.. வருகின்ற பௌர்ணமியின் பின்னர் மீளக் குடியெற்றுவோம்.
மன்னரும் உடனே அப்படியே செய்துவிடுங்கள் சேனாதிபதி என்று உத்தரவிட்டார்.
சேனாதிபதி அகன்றதும் மன்னன் பலமாகச் சிரித்து.. இனிமேல் எந்த வேங்கிப் புலியும் இந்த சோழனுடன் வாலாடட்ட முடியாது.. வேங்கி சோழத்துடன் கலந்துவிட்டது என்று பயங்கரமாக சிரித்தான். விருதரும் சிரித்தார்.
வாசலையே பாத்திருந்த சகுந்தலா கண்களில் பூரிப்பு. தந்தை வீட்டு வாசலருகே வருவதைப் பார்த்து உற்சாக மகிழ்ச்சி. தன் தங்கையின் வையிலிருந்த பெருவிரலை இழுத்தெடுத்து தந்தையினை நோக்கி ஓடினாள்.. ஏனப்பா பிந்திச்சு என்று கேட்டுகொண்டே அவர் கைகளில் இருந்த அரிசி பருப்பு பையினை வாங்கினாள்.
இல்லம்மா.. இவங்க தாற ரண்டு கிலோ அருசி பருப்புக்காக எத்தனை சனம் லையினில நிண்டிச்சு தெரியுமா? அவைகள் எல்லாம் வாங்கினாப்பிறதுதான் என்ற கூப்பன் அட்டையக் குடுத்து அருசி பருப்பு பாலும் வாங்கி வந்தனான்.
என்ன ஒரு வாழ்க்கை இது.. வெளிய போய் வேலை செய்ய இவங்க விட்டா எவ்வளவு நல்லாயிருக்கும்.. சாப்பாட்டுகாக மணிக்கணக்கா காத்திருக்க வேண்டிக்கிடக்கு.. பிச்சை எடுக்கிறமாதிரி இருக்குதம்மா என்றார் தன் கண்களில் கனத்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு.
Categories: அரசியல், இலங்கை, கதை, சிறுகதை, பாதித்தவை, வன்னி
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
Leave a Reply