மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே
என் உயிர் தொடும் நல்லிசையே..
என் நீண்ட இரவுகளிலும் நெடுந்தூரப் பயணங்களிலும் பலசமயங்களில் என் துணையாக வந்திருந்த சுவர்ணலதா இன்று இல்லை என்னும் போது ஏதோ மனதினுள் கனக்கின்ற உணர்வு. என் செவிகளுக்குள் ஊடுருவி இதயம் வரை நுழைந்து என் உணர்வுகளை இனிமையாக கட்டிப் போட்ட மானசீகக் குரலுக்கு சொந்தக்காரி சுவர்ணலதா. போதும் போதும் என செவிகள் சொன்னாலும் இன்னும் வேண்டும் உன்குரலில் மயங்கிடும் இன்பம் என என் மனம் கிறங்கிப்போன தருணங்கள் ஏராளம். யார் இந்த சுவர்ணலதா? எப்படி இருப்பார் என்று கூடத் தெரியா வயதில் இருந்தே ஏதோ ஒரு மயக்கம் அவரின் குரலின்மீது எனக்கு.
மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க… கடல் மீன் கூட்டம் ஓடி வந்து… கண்ணை பார்க்க அடடா நானும்… மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ.. அலைகள் வெள்ளி ஆடை போல.. உடலின் மீது ஆடுமோ… நெஞ்சமே பாட்டெழுது…இதுதான் எனக்கு சுவர்ணலதாவின் மீதான ஈர்ப்பின் முதற்புள்ளி. திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்திக்கு அருகில் ITN என்ற ஒரு Audio Recording Center இருந்தது. நாளும் அந்த Audio Recording Center இல் தெளிவாக ஆர்பாட்டமில்லாமல் ஒரு தணிந்த சப்தத்தில் பாடல்களை ஒலிக்கவிட்ட வண்ணமிருப்பார்கள். பாடசாலை விட்டு வீடு வரும் போதும் சரி பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் போதும் வீடு வரும் போதும் சரி அவர்கள் ஒலிக்கவிடும் பாடல்களைக் கேட்கத் தவறுவதில்லை. சைக்கிளில் செல்லும் போது பல தடவைகள் சைக்கிளின் வேகத்தை தணித்து பாடல்களின் கணிசமான அளவினை இரசித்து விட்டு செல்வதுண்டு. வேலாயுதம் சேரின் மணி tutionல் படிக்கும் போது பல தடவைகள் வகுப்புகளுக்கு வகுப்பு தொடங்கிய பிறகு வகுப்புக்குள் நுழைந்து சேரிடம் செல்லமாக கடித்தன்மையான பேச்சுகளும் வாங்கியதுண்டு. ஏனோ மனதை மயக்கும் பாடல்களில் அவ்வளவு ஈர்ப்பு.
அச்சு வெல்லமே அச்சு வெல்லமே…
அவ்வாறு ஒருநாள், அந்தப் பாடலின் சில அடிகளைத் தான் கேட்டேன். வீடு வந்தபின்னும் மீண்டும் மீண்டும் மனதும் சரி உதடும் சரி பாடல் வரிகளை மீண்டும் மீண்டும் அசைபோட்டுக் கொண்டே இருந்தது. பாடலின் தொடக்கம் தெரியவில்லை. பாடியவர் யார் என்றும் தெரியவில்லை. குரலினை வைத்து அடையாளம் கண்டு கொள்ளும் இசை அனுபவமோ புலமையோ அன்று என்னிடம் காணவில்லை. ஆனாலும் மனதின் ஆழமான பக்கங்களில் பதிந்து விட்டது. என் அதிஸ்டமோ அல்லது எதிர்பாராத சந்தர்பமோ தெரியாது, மீண்டும் அன்று இரவு சக்தி வானொலியின் அந்த பாடல் ஒலிக்க விட்டதும் ஓடிச்சென்று Tape Recorde இல் அந்தப் பாடலை பதிந்துவிட்டேன். அந்நாட்களில் அதாவது 2000 – 2004 ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் பெரிதாக இணையமோ அல்லது Google பற்றியோ தெரியாது. வெறும் வானொலி மூலம் தான் பாடல்கள் கேட்பது வழக்கம். ( பின்னாட்களில் எல்லாம் மாறிப்போனது.) என்னிடத்தில் தானாக தேடிவந்து அந்தப் பாடல். அன்றுதான் எனக்கு அறிமுகமானார் சுவர்ணலதா.
சுவர்ணலதாவின் பல பாடல்களை பல தடவை கேட்டிருந்தும் இவர்தான் அந்தப் பாடகி என்று அடையாளம் கண்டுகொள்ளத் தெரியாத தன்மையில் அன்றிருந்ததனால் பாடல்களை மட்டும் இரசித்துவிட்டு சென்று விடுவதுண்டு. “போறாளே பொண்ணுத்தாயி..”, “போவோமா ஊர்கோலம்…”, “மாசிமாசம் ஆளான பொன்னு மாமன் உனக்குத் தானே…”, “முக்காலா முக்காபுலா.. ”, “குச்சி குச்சி ராக்கம்மா…”, “மெல்லிசையே.. என் இதயத்தில் மெல்லிசையே…”, “மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபமும்…”, “அச்சு வெல்லமே அச்சு வெல்லமே…” இவற்றை முன்னரே கேட்டு பாடித்திருந்திருந்தாலும் பாடியவர் சுவர்ணலதா தான் என்று பின்னாட்களில்தான் தெரிந்து கொண்டேன். என்ன ஒரு மயக்கும் குரல். குரலி்லே அத்தனை உணர்வுகளையும் அடக்கி அதனை கேட்பவருக்குள்ளும் கொண்டு வருகின்ற திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அவ்வாறு உணர்வு பூர்வமாக பாடி எங்களையும் அந்த உணர்வுகளுக்குள் திளைக்க வைப்பவர் சுவர்ணலதா. ஏ.ஆர். ரகுமானாலும் சரி இளையராயாவானாலும் சரி மிகவும் நேர்த்தியாகப் பயன்படுத்தப்பட்ட பாடகி.
காலைப் பனியில் புதிதாய்ப் பூத்துக் குளிர்த்த மலர் எப்படி இதமாக இருக்குமோ அவ்வாறு சுவர்ணலாதாவின் குரலுக்குள் இரசித்துக் குளித்தவர்களுக்கும் இருக்கும். நீல இரவின் மடியில் மெல்லத் தலை வைத்து படுத்திருக்கையில் நினைவுகளை மெல்ல உலாவ விட்டபடி “போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு..” என்ன சோகப் பாடலை ஒருதடவை கேட்டுபாருங்கள். குரலுக்குள் குளித்து உணர்வுகளுக்குள் திளைத்து விடுவீர்கள். அப்போது பாடகியின் தனித்தன்மை புரியும்.
இந்த இசைதேவதை இனிமேல் பாடாது ஓய்ந்து விட்டாள் என்றாலும் இசை வடிவில் என்றுமே நிலைந்து நின்று எம்மை தனது குரலினால் திளைக்க வைப்பாள் சுவர்ணலதா.
சுவர்ணலதாவின் கிட்டத்தட்ட 396 தமிழ்பாடல்களை கேட்க
தெலுங்கு பாடல்களை கேட்க
பஞ்சாபி பாடல்களை கேட்க
ஹிந்தி பாடல்களை கேட்க
கன்னடப் பாடல்களை கேட்க
மலையாளப் பாடல்களைக் கேட்க
நன்றி hummaa இணையத்தளம்.
Categories: இசை, எனது பார்வையில், குறிப்புக்கள், பாடசாலை நாட்கள், பாதித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
Leave a Reply