இஞ்சி குடுத்து மிளகு வாங்கிய வரலாறு அந்தக் காலம். ஆனால் மந்திரவாதியை விரட்ட பேய் ஒன்றினை வரவைக்க வேண்டிக்கிடக்கின்றது இன்றைய காலத்தில். 2010 ஜனவரி 26 – இலங்கை சோசலிசக் குடியரசின் 6ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
முப்பது வருடங்களாக தமிழரின் உரிமையை மீட்டெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட இலங்கை அரசுடனான போரின் முடிவுரை தற்போதைய ஜனாதிபதியினால் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் எழுதி வைக்கப்பட்டது. பல்லாயிரம் அப்பாவி உயிரகளைக் காவு கொண்ட இந்தப் போரின் இறுதி நாட்கள் இன்னும் மாறாத வடுக்களாக ஒவ்வோர் தமிழனின் நெஞ்சத்திலும் காணப்படுகின்றது. போரின் பின்னர் திறந்த வெளிச் சிறைபோன்ற புனர்வாழ்வு முகாங்கள் என்னும் பெயர்கொண்ட தடுப்பு முகாங்களில் வாடும் மக்களின் அல்லல் இன்னமும் தீரவில்லை. தமிழருக்கென்று தனி இராச்சியம் அமைக்கும் கனவு நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் தவுடுபொடியானது. தமிழரின் அடுத்த அரசியல் இலக்கு என்ன என்பது பற்றிய தெளிவு இன்னமும் வரையறுக்கப்படாமல் ஆளுக்கு ஒரு திக்குக்கு இழுக்கும் அரசியல் கொள்கைகளை தமிழர் மீது திணிக்க முயலுகின்றன தமிழ் அரசியல் கட்சிகள். இவ்வாறான சூழ்நிலையில்தான் தமிழர் முன்னிலையில் இந்த ஜனாதிபதித் தேர்தல் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டை உலுப்பிக்கொண்டும், மிகப்பெரிய பொருளாதார வளத்தை சுருட்டி ஏப்பம் விட்டுக் கொண்டும், நாட்டைப் பிரித்து விடுமோ என எண்ணியருந்த சிங்கள மக்களின் முகத்தில் ஒரு திருப்தி, நாட்டை காத்து ஒன்றுபடுத்திக் காத்துவிட்டதாக. இனிமேல் சிங்களக் கிராமங்களுக்கு வடக்கு கிழக்கில் இருந்து சிங்கள இளைஞர்களில் இறந்த உடல்கள் வாரது என்று மிகப்பெரிய சந்தோசம் அவர்களிடம். சிங்கள மக்களின் இன்றைய நிலை இவ்வாறு இருக்கின்றது.
இதனால் இந்த தேர்தலின் பயன்படுத்தப்படும் முக்கியமான தேர்தல் பிரச்சார ஆயுதம், தமிழீழ விடுதலைப் புலிகளினுடனான போரின் வெற்றி. இந்த வெற்றியின் மூலம் இலங்கைத் தீவின் பெரும்பான்மையின சிங்கள மக்களின் மனதில் தற்போதய ஜனாதிபதி மகிந்த இராசபக்க ஒரு மிகப்பெரிய மதிப்பினைப் பெற்றுள்ளார். நீண்ட கால யுத்தத்திற்கு முடிவுரை எழுதியவராச்சே. ஆனாலும் இந்த வெற்றி தன்னால் தனது தலைமையினால்தான் சாத்தியமாகியது என்றும் தன்னை துட்டகைமுனு மன்னனோடும் ஒப்பிட்டு தன்னை மன்னன் எனவும் இலங்கையில் மன்னராட்சி நடப்பது போல நாட்டினை வழிநடாத்த முற்பட்டதுடன் தனது குடும்ப உறுப்பினர்களை அரச இயந்திரத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தி அவர்களுக்கு கூடுதல் அதிகாரங்ளையும் வழங்கியிருந்தார். அதனைவிடவும் ஊழல்கள், மக்களின் பணத்தில் மிகின் எயார் நிறுவனத்தின் இயக்கம், விடுதலைப் புலிகளின் சொத்துகளை அரசுடமையாக்காமல்-அந்த சொத்து விபரங்களை வெளியிடாமல் இரகசியமாக வைத்திருக்கின்றது போன்ற பல்வேறு காரணங்களால் சராசரி சிங்கள மக்களின் மனதிலும் கசப்புணர்வை தாராளமாக நிரப்பி விட்டார். யுத்தத்தில் வெற்றி வெற்ற போது போற்றித் துதித்த சிங்கள மக்கள் இன்று நமக்கு வேறு ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைக்கத் தொடங்கி விட்டார்கள். அதே நேரம், யுத்தம் முடிந்த கையோடு நடைபெற்ற படைக்கலச் மாற்றங்கள். பலமான இராணுவ இயந்திரத்தை தன் கட்டுப்படாட்டுக்குள் வைத்திருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகா எங்கே இராணுவ சதிப்புரட்சி எதனைவும் மேற்கொண்டு இலங்கைத் தீவின் அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவாரோ என்ற பயத்திலும், யுத்த வெற்றியை முற்று முழுதாக தமக்குச் சாதகமாக மாற்ற, யுத்தத்தை முன்னின்று நடாத்திய ஜெனரல் சரத் பொன்சேகாவினை செயற்பாடற்ற ஒரு ஜட நிலைக்குத் தள்ளும் நோக்குடனும் அவர் ஓரங்கட்டப்பட்டார்.
இதற்கிடையில் மகிந்த சகோதரர்களால் நொந்து நுாலாய்ப்போன ஐக்கிய தேசியக் கட்சி நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலுக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று தவித்துக்கொண்டிருந்தது. எத்தனை முறைதான் ரணில் விக்கிரமசிங்க மகிந்த சகோதரர்களிடம் அடிவாங்குவது. எதனை வைத்து மகிந்த பிரசாரத்தை முன்னெடுக்கப் போகின்றாரோ அதை வைத்துதான் அவரை எதிர்க்க வேண்டும். ஆனால் மகிந்தவின் ஆயுதம் அந்த யுத்த வெற்றி. யுத்த வெற்றி என்றும் மிகப்பெரிய பிரச்சார ஆயுதத்தை ஐக்கிய தேசியக் கட்சியினால் பங்குபோட முடியாது. அப்படியானால் அதனைப் பங்கு போடக்கூடியவர் காலாவதியான ஜெனரல் சரத் பொன்சேகாதான். அவரை மகிந்தவை எதிர்க்கும் முக்கிய பாத்திரத்தில் அரங்கேற்ற ஆயத்தமானது ஐக்கிய தேசியக் கட்சி. மகிந்தவை எதிர்த்தா அப்படியானால் நாங்களும் கைகோர்ப்போம் என பல கட்சிகள் ஒன்று சேர்ந்தன.
காற்றுப்போயிருந்த ஜெனரல் சரத் பொன்சேகா, அவரும் எப்படி அரசியலுக்குள் நுழைவது என சமயம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு ரணிலின் அழைப்பும் பொது வேட்பாளாராக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் அதீத மகிழ்ச்சி. ரணிலோ, சரத் பொன்சேகாவினைப் பயன்படுத்தும் நோக்கம் : சரத் பொன்சேகாவிற்கோ ரணிலையும் தொண்டர் குழாமிற்கு
ஐக்கிய தேசியக் கட்சியையும் பயன்படுத்தும் நோக்கம். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் நடைபெறப்போவது ஓர் கரகாட்டாம். ஒருவர் மற்றொருவரில் தங்கி இந்தப் போட்டியில் ஆட வெளிக்கிட்டுவிட்டார்கள். குடம் கவிழ்ந்தால் தோற்றுப் போவது ஆடிக் கொண்டிருப்பவர்தான். ஆனால் இங்கே யார் அந்த குடம் என்பது தான் தெரியவில்லை.
சிங்கள மக்களும் பொன்சேகாவிற்கே தமது ஆதரவைத் தரவிரும்புகின்றார்கள். மாற்றம் வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. சரி தமிழ் மக்கள்?? தமிழின அழிப்பை முன்னின்று நடாத்திய இருவரும் முதன்மை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். யாரை ஆதரிப்பது? வழமைபோல இருவரும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நிறைவேற்றுவார்களா? அது தெளிவான உண்மை.. ஒருநாளும் அதனை அவர்கள் கருத்திலெடுக்கக் கூட மாட்டார்கள். அரசியல் சாணக்கியம் பெரிதாக இல்லாத சரத் பொன்சேகா வாய்க்கு வந்த வாக்குறுதிகளை தாறுமாறாக வழங்கிக் கொண்டிருக்கின்றார். மேலாக மகிந்த ராயபக்ச வீதியொரமெங்கும் தனது கட்டவுட்டுகளைத் தொங்கவிட்டுள்ளார், வீதியொரத் தொலைக்காட்சிகளில் நடைவெறும் அவரின் பிரசாரம். இதுவும் போதாதென்று இருவரும் google adwords இலும் Facebook இலும் செய்யும் விளம்பரங்கள் ஏராளம்.
பொதுமக்களின் பாவனைக்கும், தனியார் வாகனப்போக்குவரத்திற்கும் என சடுதியாகத் திறக்கடப்பட்ட A9 வீதி, அம்மாந்தோட்டையில் இருந்து யாழ் விரையும் பேருந்துகள், வடக்குக் கடற்கரைச் சாலைகளை நிரப்பும் சிங்கள மக்களின் வாகனங்கள், வழமைபோல தேர்தற் கால சலுகைகைள் என வரும் பெற்றோல் விலைகுறைப்பு, மா விலைக்குறைப்பு, gas விலைக்குறைப்பு என அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குறுங்கால நாடகங்கள் என்பன மகிந்தவின் வாக்குவங்கியை நிரப்பப் பார்க்கலாம். ஆனாலும் மேல்மாகாண மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளை நிரப்பினாலும் கிராமப்புற மக்களின் நிலை எவ்வாறு இருக்கப் போகின்றது. அது தேர்தலின் பின்தான் தெளிவு. துட்டகைமுனுவா இல்லை அவரது சேனாதிபதியா? பார்ப்போம்.
சரி வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் எப்படிப் போகப் போகின்றது. இறுதியாக நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் மக்களின் வாக்கு மிக மிகக் குறைவாகவே பதியப்பட்டன. மக்களுக்கு ஜனநாயத்தின் மேல் உள்ள விருப்பு அகன்றுவிட்டதா இல்லை எது நடந்தாலும் எமக்கென்ன என இருக்கும் பிடிப்பின்மை அவர்களின் வாழ்க்கையில் தொற்றிவிட்டாதா. நிட்சயமாக இல்லை! நான் வாக்குப் போட்டு வெற்றி பெறப்போகின்ற நபர் எனது கஷ்டங்களைத் தீர்த்து வைத்துவிடத்தான் போகின்றாரா? இல்லையே! பின்னர் ஏன் நான் அவருக்கு வாக்குப்போட வேண்டும் என்கின்ற சராசரி மனித இயல்புதான். இந்தத் தேர்தலிலும் வடக்குக் கிழக்குத் தமிழரிடம் அத்தகைய ஒரு பாராமுகம்தான் இருக்கும் என்பது எனது கணிப்பாகும். ஆனாலும் அடுத்த ஜனாதிபதியாக வரப்போகின்றவருக்கு தொடர்ந்து வரப்போகின்ற ஆறு வருடங்களுக்கும் தேவையான அளவு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வடக்குக் கிழக்கு மாகாணத்தில் நிறையவே இடங்கள் இருக்கின்றது. அவ்வாறு செய்வாராயின் மக்களின் இந்தப் பாராமுகத்தினை மாற்றியமைத்தவராக அவர் இருப்பார். அடுத்த தேர்தலிலாவது மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியவராக இருப்பார். பார்ப்போம்.
பிற்குறிப்பு : இந்தப் பதிவு எழுதிக்கொண்டிருக்கும் போது நண்பன் ஒருவன் தகவல் அனுப்பினான் யாழ்ப்பாணத்தில் நேற்றுப்பிற்பகலில் இருந்து வசந்தம் தொலைக்காட்சி தெளிவாக ஒளிபரப்படுவதாகவும். இன்று சிறப்புத் திரைப்படமாக BOYS திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருகின்றதாம். 🙁
Categories: அரசியல், இலங்கை, எனது பார்வையில், பார்வை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
பேசாம சுபானுவையே தேர்ந்தெடுப்பமா.. பதிவுக்கு கீழ ஈழத்தமிழரின் இனிய எதிர்காலம் சுபானு என்று இருக்குதே… அப்ப சுபானுதான் எங்கட எதிர்காலம்.
அது சரி வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் பெரும் பகுதியை டக்லஸ் தம்பியும் கருணாத் தும்பியும் போடுவினம் தானே…
சரத் பொன்சேகாவோட சொந்த்த இடம் காலியாம்(Galle) இனி அம்பாந்தோட்டை இக்குப் பதிலா காலி வளரப் போகுது போல….
அரசியலா……? நான் இங்க வரவும் இல்ல இதை வாசிக்கவும் இல்லா….
Really nice analysis.
பேசாம சுபானுவையே தேர்ந்தெடுப்பமா.. பதிவுக்கு கீழ ஈழத்தமிழரின் இனிய எதிர்காலம் சுபானு என்று இருக்குதே… அப்ப சுபானுதான் எங்கட எதிர்காலம்.
என்ன Vanessa நக்கலா.. நான் ஒன்றும் அரசியல் நடத்தலயப்பா… என்னை விட்டுடுங்க…