முன்கதை : பீனிக்ஸ் விண்வெளியோடத்தில் இதுவரை மனித சஞ்சாரமே கண்டிராத தடங்களை நோக்கி ஒளியின் வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தார்கள் இளம் விஞ்ஞானிகள். பீனிக்ஸின் கலந்துரையாடல் அறையில் தமது பயணத்தின் நோக்கம் பற்றியும் வியாழன் கிரகத்தின் நடத்தை மாற்றம் பற்றியும் விளக்கங்களை பானு தனது சக விஞ்ஞானிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான். வியாழனின் மேற்பரப்பில் சடுதியாகத் தோன்றிய ஒளிக்கீற்றின் காரணம் என்ன என அனைவரும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்….
பிரபஞ்சத்தின் காரிருளையும் ஊடறுத்து மின்னலெனெப் பாய்ந்து கொண்டிருந்த பீனிக்ஸின் மீது படர்ந்திருந்த கரும் நீல ஒளிபடலம் முழுமையா தனது பிடிகைக்குள் பீனிக்ஸினைக் கொண்டு வந்தது. வெளியில் இருந்து எந்த சக்கியும் பீனிக்ஸை அணுகாத படியும் உள்ளிருந்து எந்த சக்தியும் வெளியேறாத படியும் காப்பரண் போல பீனிக்ஸை கவசமாக மூடிக்கொண்டது.
கலந்துரையாடல் அறையில் நீண்டிருந்த சுவாரசியக் காற்று பீனிக்ஸின் வெளியே நிலவிய அசாதாரண நிலமையை உணர்த்த தவறிவிட்டது. வியாழனின் மேற்பரப்பில் தோன்றிய அந்த கண்ணைப் பறிக்கும் ஒளிப்பிழம்பின் காரணம் என்ன என்பது பற்றி பானுவின் ஆராச்சி விளக்கங்களை எல்லோரும் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். காட்சித்திரை மீண்டும் உயிர் பெற்றது. சடுதியாக தோன்றி மறைந்த அந்த ஒளிப்பிழப்பின் அடி நாதத்தைத் தேடி மாலதியின் கமராக்கண்கள் கூர்மையாக்கப்பட்ட காட்சி காட்சித்திரையில் தெளிவாக்கப்பட்டன. வியாழனின் மேற்பரப்பில் சரியாக வியாழனின் மத்திய கோடும் சூரியனையும் வியாழனை இணைக்கும் ஈர்ப்பு விசை தாக்கும் கற்பனையில் வரையப்படும் விசையின் பிரயோகப் புள்ளியும் சந்திக்கும் பகுதியில் சீராக அணிவகுத்து நின்றன பல்லாயிரம் உலோக ஜந்துக்கள்.
நீளமான ஆறு கால்களில் மிதக்கும் உருண்டை வடிவ உடலில் வெண்மஞ்சளும் கபிலமும் கலந்த வரிகள் பரந்து காணப்பட்டன. அத்தோடு விண்வெளியை நோக்கியபடி இரண்டு கமாராக் கண்கள் அவற்றின் தலையோன்ற அமைப்பில் பொருத்தப்பட்டு இருந்தன. அந்த கமராக் கண்களின் அருகே இரண்டு உணரிக் கொம்புகள் போன்ற அமைப்பிலான உலோக உணரிகள் காற்று மண்டலமற்ற வியாழனின் மேற்பரப்பில் மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தன. அடிப்புறமாக நீண்டிருந்த கால்களின் கீழே விட்டுவிட்டு ஒரு மஞ்சள் நிற ஒளிமுதல் பிரகாசித்துக்கொண்டிருந்து. அப்படியே பார்த்தால் மின்மினிப் பூச்சிகளின் தோற்றத்தை ஞாபகப்படுத்தியது அந்த உலோக ஜந்துக்கள்.
மின்மினியா.. மஞ்சரியின் குரல் பானுவை திசைமாற வைத்தது. இல்லை மஞ்சரி நீங்க பார்த்து வெறும் விண்வெளி ஓடத்தின் அமைப்புதான். ஒவ்வோர் விண்வெளி ஓடத்தினுள்ளும் பத்துத் தொடக்கம் பதினைந்து வரையான வேற்று உயிரினங்கள் உள்ளது. அவற்றினை நீங்கள் பார்த்தால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்.. ஆமாம் அவை எமது பூமியில் மின்னி மின்னிப் பறக்கும் மின்மினிப்பூச்சிகளின் வடிவத்தை ஒத்த உயிரினங்கள். ஆனால் பூமியின் மின்னிப் பூச்சிகளிலும் இவை பலமடங்கு பெரியவை. பார்ப்தற்கு எமது மனித உருவத்தின் அரைவாசி உயரத்திற்கு அவை இருக்கும். மற்றைய அனைத்து அம்சங்களும் ஒத்திருக்கின்றன. அவைதான் அந்த மின்மினி வடிவ ஓடத்தை செலுத்துகின்றன.
ஆமாம் மின்மினிகளின் விண்வெளி ஓடம்தான் அவை. அவையும் மின்மினிகளின் அமைப்பிலேயே அமைக்கப்பட்டுள்ளன என்றான் ஆதித்யா. சரி அந்த மின்மினி ஓடங்கள் அங்கே வியாழளின் மேற்பரப்பில் என்ன செய்கின்றன? அவற்றினால் வியாழனின் இயக்கத்தை எவ்வாறு மாற்றமுடிகின்றது என தனது ஐயத்தைக் கேட்டாள் ரோகினி. ரோகினி நீங்கள் ஒரு துப்பாக்கிக் குண்டு சுடும்போது பார்த்திருப்பீரகள் தானே? அதன் போது சுடும் துப்பாக்கியில் தாக்கும் பின் உதைப்புப் பற்றியும் அறிவீர்கள் தானே. அதாவது வெளி விசைகளின் தாக்கம் இல்லாத போது சடப்பொருட்களின் இயக்கங்களினால் உருவாக்கப்படும் உந்தமானது எப்போதும் காக்கபடும். அந்த உந்தக்காப்புத் தத்தவத்தின் பிரயோகம் தான் அங்கே நடைபெறுகின்றது. இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் அந்த விண்வெளி ஓடங்கள் ஒவ்வொன்றும் ஒரே சமயத்தில் பல ஒளியாண்டுகள் வேகத்தில் வியாழனின் மேற்பரப்பில் இருந்து வீறிப்பாய்ந்து மேல் எழும். அந்த சந்தர்பத்தில் உருவாகுகின்ற உந்தத்தினை சமப்படுத்துவதற்கு வியாழன் எதிர்த்திசையில் நகரவேண்டிய நிர்பந்ததிற்கு உள்ளாகும். அதன் திணிவு மிகப் பெரிதாக இருப்பதனால்தான் இவ்வளவு காலத்திற்கு தாக்குப் பிடித்து நிற்கின்றது. நமது பூமியோ அல்லது புதன் கிரகமாகவோ இருந்திருந்தால் கிரிக்கட் பந்து எல்லைக் கோடுகளைத் தாண்டிப் பறப்பது போல இவை எதிர்த்திசையில் பாய்ந்து சூரியனின் ஈர்ப்புக்கு அப்பால் போய் விழுந்திருக்கும்.
இவ்வளவு சக்தி வாய்ந்தனவா அந்த மின் மினிகள் என்று ஆச்சரியக் குறியை உயர்த்தினாள் ரோகினி. ஆமாம் ரோகினி எமது பூமியில் எவ்வாறு மனித இனம் ஆட்சியுடைய விலங்காக மாறியதோ அதே போல அந்த மின்மினிகளின் தேசத்தில் அவை ஆட்சியுடைய விலங்காக மாறியிருக்கலாம். அவற்றின் பரிமாண வளர்ச்சிக்குரிய ஏது காரணிகள் அங்கே சாதகமாக அமைந்திருக்கலாம். யாருக்குத் தெரியும் மனித இனம் அங்கு சிற்றறிவுடன் மின்மினிகளின் சேவகப்பிள்ளைகளாக மின்மினிகன் தேசத்தில் இருந்தாலும் இருக்கலாம். பூமியில் மனிதன் என்னும் விலங்கு கூர்ப்பில் அதியுற்ச நிலையடைய காரணமாயிருந்த காரணிகள் அங்கே இல்லாமல் இருந்திருகும். அத்தோடு இந்த மின் மினிகள் நமது மனித இனமா கண்டிராத பற்பல விஞ்ஞான வளர்சிகளைக் கடந்திருக்கின்றதைப் பார்த்தால் மின்மினிகளுடன் ஒப்பிடும் போது நாம்தான் பூச்சி. அவர்களின் விண்வெளி ஓடத்தின் வேகம் அதற்கு சான்று என்றான் ஆதித்தா.
அதுசரி ஏன் அவர்கள் வியாழனை இவ்வாறு ஞாயிற்றுத்தொகுதியில் இருந்து பிரித்தெடுக்க முயற்சி செய்கின்றார்கள்? அதனால் அவர்களுக்கு என்ன இலாபம் என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தான் இராகவன். அதுதான் புரியாத புதிர். ஏதாவது ஆராச்சித் தேவைக்காக அல்லது குடியேற்றத்திட்டத்திற்காகவாவதும் இருக்கலாம். நமது இந்தப் பிரயாணத்தின் நோக்கமே அந்த மின்மினிகளின் தேசத்திற்கு சென்ற அங்கு அவர்களோடு பேச்சுவார்த்தை நடாத்துவதுதான். வியாழனில் தங்கியருப்பது வெறும் மின்மினிகளின் தொழிளாளர் படைதான் அவர்களிடம் பேசிப் பிரயோசனம் இல்லை என்றுதான் நாம் மின்மினி தேசம் நோக்கி விரைகின்றோம் என்றான் ஆதித்தா. அவர்களின் விஞ்ஞான வளர்சியைப் பார்த்ததிலேயே புரிந்திருப்பீரகள் அவர்களுடன் சண்டையிட்டு வியாழனைக் காப்பாற்ற முயற்சித்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் நமது பூமியை பஸ்பமாக்கி விடுவார்கள். எனவேதான் நான் மின்மினி தேசம் சென்று அவர்களின் தேவை என்னவென்று அறிந்து வியாழனை நாம் இழப்பதால் பூமியின் உயிர்வாழ்க்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை உணர்த்தி அவர்களின் தேவைக்கு அதற்கு மாற்றுவழியைத் தேர்ந்தெடுக்க வைக்க முயலவேண்டும். இதுதான் நமது இந்தப் பயணத்தின் நோக்கம் என்றான் ஆதித்யா. பார்ப்போம் நமக்கு வெற்றியா இல்லையா என்னவென்று. இடையில் குறுக்கிட்ட மஞ்சரி சிவந்து உதடுகளை திறந்து சிரித்துக் கொண்டு முடியாதது என்று எதுவுமே இல்லை என்றாள். அறை முழுவதும் ஒரு நம்பிக்கையூட்டும் எதிரொலி மஞ்சரியின் சிரிப்போடு கலந்து ஒலித்தது.
அங்கே கலந்துரையாடல் அறையில் பீனிக்ஸின் அனைத்து விஞ்ஞானிகளும் சேர்ந்திருந்த தருணம் பீனிக்ஸ் விண்வெளிக் கப்பல் ஆபத்து நிறைந்த பாதையொன்றில் மிகவும் துணிவுடன் கம்பீரமாகச் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. அதனை கூழ்ந்திருந்த அந்த நீலநிறக் கவசத்தினைப் பற்றிய எந்தவிதமான சலனமும் இல்லாமல் கலந்துரையாடல் அறையில் கலந்துரையாடல் நிறைவுக்கு வந்தது. அவரவர் தமது கட்டுப்பாட்டு அறைகளுக்குள் மீளவும் நுழைந்தார்கள். தனது அறையில் இருந்த கட்டுப்பாட்டு காட்சித்திரையில் பீனிக்ஸின் முன்னால் விரிந்திருந்த காட்சிகளைப் பார்த்ததும் மஞ்சரி அதிர்ந்து போனாள்.
கண்முன்னே நடப்பது கனவா.. நம் ஆறுபேரினதும் ஆயுளின் நீளம் இவ்வளவுதானா.. இப்போதுதானே கூறிவிட்டு வந்தேன் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று. ஆனால் அதற்குள்ளாக இவ்வளவு பெரிய ஆபத்தா? என்ன செய்வது இனி என்று பலவாறு யோசிக்கத் தொடங்கினாள் அந்த நித்தய அழகி மஞ்சரி.
கண்முன்னே விரிந்திருந்த பிரபஞ்ப வெளியில் இருந்த சின்னச் சின்ன விண்கற்கள் மீது ஏதோ ஒன்று மோத அந்த விண்கற்கள் அடுத்த கணத்தில் அவள் கண்முன்னே பஸ்பமாக மறைந்து கொண்டிருந்தன. பார்த்தவுடனேயே இளம் விஞ்ஞானி மஞ்சரி புரிந்து கொண்டாள் நாம் நுழைந்திருப்பது ஏதோ ஒரு வேற்றுக்கிரகத்தின் சோதனை ஆய்வுகூடம். அதுவும் அன்ரிமற்றேசுக்குரிய சோதனை ஆய்வுகூடம். அந்த ஆய்வுகூடத்தினுள் நாங்கள் நுழைந்தால் நமக்கும் அந்த விண்கற்களின் நிலைதான். நொடிப்பொழுதில் பஸ்பமாகிவிடுவோம். அவளைக் கேட்காமலேயே அவளது சிவந்த உதடுகள் ஆதித்…..யா………… என உரத்துக் கத்திவிட்டன.
தொடரும்….
Categories: கதை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
ஒரு மாதமாக தொடராத கதையை தொடர வைத்த "எல்லாப் புகழும் மஞ்சரிக்கே"
🙂
/*…
அவளைக் கேட்காமலேயே அவளது சிவந்த உதடுகள் ஆதித்…..யா………… என உரத்துக் கத்திவிட்டன.
…*/
என்ன தமிழ் தொலைக்காட்சி சீரியல் மாதிரி அடுத்தது என்ன என்று முடிச்சிருக்கீங்க…
கதை நன்றாகப் போகிறது. தொடருங்கள்
அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்…நன்றி…
அருமையாகச் செல்கிறது. ஒரு சந்தேகம்….படங்களெல்லாம் நீங்களே உருவாக்கியதா? கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கின்றன!
physics class physics class க்கு ஒழுங்காக போய் இருப்பிங்கள் போல இருக்கு. கதை நன்றாகப் போகிறது. தொடர வாழ்த்துக்கள்
ஒளியாண்டுகள் வேகத்தில் ????????