முன்கதை : ஆட்டிபிஷல் இன்ரெல்யன்ஸ் என்னும் செயற்கைப் புத்திசாலித்தனத்தை முழுமையாகப் பயன்படுத்தி எந்தவிதமான மனிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தானாகச் சிந்தித்து செயற்படக்கூடிய பீனிக்ஸ்விண்வெளிக் கப்பலின் துணைக் கப்டன் மஞ்சரி விண்வெளியில் இதுவரை மனித சஞ்சாரமே கண்டிராத தடங்களை நோக்கி தனது இளம் விஞ்ஞானிகள் குழுவுடன் ஒளியின் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றாள்… பாகம் 1
இனி…
வாங்க மஞ்சரி.. ஆதித்யனின் குரல் அவளை வரவேற்றன. அவனைப் பார்த்து மெல்லச் சிரித்து விட்டு தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டாள் மஞ்சரி. எல்லோரும் வந்துவிட்டார்களா எனக் கண்களை ஒரு சுற்று சுழற்றிப் பார்த்து குரலை மீண்டும் உயர்த்தினான் பீனிக்ஸ் இன் கப்டன் ஆதித்யா.
நேர்த்தியாக வாரப்பட்ட கேசம். மாநிறம் என்றால் என்ன என்பதற்கு வரைவிலக்கணம் அவனின் சருமம். வசீகரக் கண்கள் வீசும் பார்வைகள், இலகுவில் எவரையும் தனது ஆழுமைக்குள் கொண்டு வந்து விடும். அந்தக் கண்களில் எப்போதும் மாறாது படர்ந்திருக்கும் ஈரம், அவன் உள்ளத்தின் கனிவின் பிரதிபலிப்பு. உதடுகளின் ஓரத்தில் ஒளிந்திருக்கும் அந்த சின்னப் புன்னகை அது அவனின் தனிச் சிறப்பின் முத்திரை.
நாங்கள் எல்லோரும் மிகவும் முக்கியமான அதிகம் ஆபத்து மிக்க பயணம் ஒன்றில் ஈடுபட்டிருக்கின்றோம். எங்கள் ஒவ்வொருவரினதும் அர்ப்பணிப்பு மிக்க முயற்சிதான் இங்கே நமது இலக்கின் வெற்றிக்கு ஒரே ஒரு மூலதனம். நம் ஒவ்வொருவரினதும் எதிர்காலத்தினை நிர்ணயிக்கப் போவதும் நம்மை நம்பி அனுப்பி வைத்த எமது பூமியின் உறவுகளின் எதிர்காலமும் எங்கள் அறுவரின் கைகளில் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. நாம் சென்று கொண்டிருக்கும் பாதை இதுவரை எவரும் வரையறுக்காத பாதை. எவரும் சென்று பாத்திராத பாதை.அந்தப் பாதையில் அடுத்த நொடி மறைத்து வைக்கப்பட்டுள்ள மர்ம முடிச்சுக்கள் நிட்சயமாக ஏராளம். ஆனால் நிட்சயமாக அவை இரசிக்தத்தக்க ஒன்றாகத்தான் இருக்கும். அந்த மர்ம முடிச்சக்களை அவிழ்த்து புதுக் கதையொன்றைப் படித்து இரசிக்க நானும் உங்களோடு ஆர்வத்தோடு தயராக இருக்கின்றேன். பார்ப்போம்! முடியாது என்று எதுவும் இல்லை. நிச்சயமாக நமது இலக்கு வெற்றி பெறும்.
ம்… பானு நமது இந்தப் பயணத்தின் நோக்கத்தினை எல்லோருக்கும் கொஞ்சம் விரிவுபடுத்துங்கள். இங்கிருக்கின்ற எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் மீளவும் எல்லாவற்றையும் தெளிவுபடுத்த இது வாய்ப்பாக இருக்கும். என்று விண்வெளி ஆய்வுகளில் பிரத்தியேக பயிற்சியை மேற்கொண்ட பானுவை அழைத்துவிட்டு அமர்ந்தான் ஆதித்யன்.
தனக்கு முன்னால் இருந்த மடிப்புக்கணணியின் திரையில் விரல் நுனியினால் சிலவற்றை வரைந்தான் பானு. உடனே முன்னால் இருந்த அந்தப் பெரிய வெண்திரை ஒளிர்ந்தது… சில காட்சிகள் விரிந்தன அதிலே..
ஒரு விண்வெளிக்காட்சி அது.. நீண்ட நிசப்தம் நிறைந்த பெருவெளி. கருங்கம்பளத்தில் விதைக்கப்பட்ட வைரக்கற்களைப்போல மின்னி மின்னி ஒளிர்ந்தன பல நட்சத்திரங்கள். அதிலே பளிச்சிட்டுத்தெரிந்த ஒரு பெரிய கோளினை நோக்கிக் காட்சி நீண்டது. மஞ்சள் நிறமான அந்தக் கோளில் சிவப்பு நிறக்கோடுகள் மிகதெளிவானதும் அந்தக் கோள் நமது ஞாயிற்றுக் தொகுதியின் வியாழன்தான் என புலனாகியது. வியாழனிற்கு அண்மையாக அந்த காட்சி வந்ததும் சில நிமிடங்களுக்கு காட்சி நிலையானது. வியாழனின் மேற்பரப்பு மிகத் தெளிவாகப் படமாக்கப்பட்டது அந்த வெண்திரையில். திடீர் என்று வியாழனின் மத்திய பகுதியில் சில ஒளிப்புள்ளிகள் தோன்றி மின்னல் வெட்டியது போல் பளிச்சிட்டு மறைந்தன காட்சித் திரையில் இருந்து. அந்த ஒளிப் புள்ளிகள் அந்த காட்சித்திரையில் சில கணங்கள்தான் தோன்றியிருந்தாலும் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை. வெண்திரை மீண்டும் ஒளியிழந்து வெண்மையாகியது..
நீங்க இதுவரைக்கும் பார்த்தது எனது சூரிய மண்டலத்தில் வியாழன் கிரகத்தைச் சுற்றி வரும் மாலதி அதிவேக விண்வெளிக் கப்பலில் இருந்து படமாக்கப்பட்ட காட்சிகள். சில நாட்களுக்கு முன்னர் வியாழன் கிரகம் தனது சுற்றுப் பாதையில் இருந்து விலகி போவதை மாலதி சந்திரனில் உள்ள விண்வெளி நிலையத்தின் மத்திய நிலையத்திற்கு தெரியப்படுத்தியது. சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய கோளான இந்த வியாழன் சூரிய மண்டலத்தில் இருந்து விலகிச் செல்வது ஏன் எனத் தெரியாமல் குழம்பியிருந்தது அப்போது அந்த விண்வெளி மத்திய நிலையம். மாலதியின் தகவல் மேலும் ஆராயப்பட்டது அங்கே. வியாழன் தனது சுற்றுப்பாதை விட்டு தீடீர் தீடீர் என்று நேர்கோட்டில் இயங்கி பின் மீண்டும் புதிய நீள்வளைய அச்சில் சூரியனைச் சுற்றி இயங்குவதுமாக தாறுமாறான நடத்தை மாற்றம் உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு தீடீர் தீடீர் என்று அது ஏன் நேர்கோட்டு இயக்கத்தில் இயங்குகின்றது. சூரியனை வியாழன் ஒரு சீரான நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதற்கு சூரியனுக்கும் வியாழனுக்கும் இடையே காணப்படும் ஈர்ப்பு விசையே வட்ட இயக்கத்தை செய்யத் தேவையான மைய நாட்டவிசையைக் கொடுக்கின்றது. இவ்வாறு தீடீர் தீடீர் என வட்ட இயக்கம் விலகுவதாக இருந்தால் அந்த மையநாட்ட விசை அறுபடவல்லவா வேண்டும்..? அது எவ்வாறு சாத்தியமாகும். கற்பனையில் வரையப்படும் அந்த இணைப்பை அறுப்பதானால் அந்த மைய நாட்ட சக்தியை விலகச் செல்வதற்கு அதற்கு சமனும் எதிருமான மாற்று விசையை கயிகட்டி இழுப்பது போல இழுத்தால்தான் இவ்வாறான நிகழ்வு சாத்தியம்!.. இவ்வாறான இயற்கைக்கு மாறான நிகழ்வினால் நமது பூமியின் இயக்கும் அல்லவா பாதிக்ப்படும்.. நமது பூமியின் இயக்கம் சீராக இருப்பதற்கு நமது ஞாயிற்றுத் தொகுதியின் அனைத்துக் கோள்களினதும் சீரான இயக்கம் அவசியப்படுகின்றது. அதிலே எந்த ஓர் கோளும் குளறுபடி செய்ய முயற்சித்தால் அந்தக் குழப்பம் ஏனையவற்றையும் பாதிக்கும். எனவே முதலில் வியாழனின் நடத்தை மாற்றத்துக்குக் காரணம் என்ன என்பது பற்றி ஆராய வேண்டும் என்று மத்திய நிலையத்தில் முடிவெடுத்தன் விளைவாக மாலதியின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. அதன் விளைவுதான் நாம் பார்த்த இந்தக் காட்சிகள்.. என முடித்து நீண்ட மூச்சு விட்டான் பானு. இனி நாங்கள் அந்தக் காட்சியின் மிகுதிக் காட்சியையும் பார்ப்போம்.
பீனிக்ஸின் கலந்துரையாடல் அறையில் வெண்திரை மீண்டும் ஒளிர்ந்தது. அதேவேளை விண்வெளியில் ஒளியினோடு சரிநிகராகப் போட்டி போட்டு விண்வெளி வீதிதனில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த அந்த பீனிக்ஸினை மெல்ல எங்கிருந்தோ கணக்கிடமுடியாத வேகத்தில் வந்த ஒரு கரும் நீலநிறப்படலம் ஒன்று முற்றாக மூடத்தொடங்கியது. மார்கழி மாலையில் மலைமுகடுகளை மெல்லப் படர்ந்து மூடிவிடும் பனிப்புகார் போல அந்த நீலநிறப் படலம் பீனிகஸினை முழுமையாக மூடிக் கொண்டது. ஒளியின் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த பீனிக்ஸினை தன் மெல்லிய நீண்ட கரங்களுக்கள் இழுத்து அடக்கிக் கொண்டு அதனோடு சேர்ந்து ஒளியின் வேகத்தில் பயணித்தது அந்த நீலநிறப்படலமும்…
தொடரும்….
Categories: கதை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
நல்ல கற்பனை… மிக அருமையான முடிச்சு.
நன்றி