நீண்ட பெருவெளியில் பயணிப்பது போல நாம் வாழ்க்கை போய் கொண்டே இருக்கின்றது. அந்தப் பயணப் பாதை மென்மையா பூக்கள் சொரியும் மலர்ப் பாதையாக இருக்க வேண்டும் என்பதே பயணத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரதும் விருப்பம். ஆனால் அந்தப் பயணப் பாதை அவ்வாறு ஒருவருக்கும் மலர்பாதையாக இருப்பதில்லை என்பதே தெளிவான உண்மை. வலிதரும் முட்களும் ஆள் விழுங்கும் புதைகுழிகளும் கசப்புக்கள் நிறைந்த பாலைநிலங்களும் என அந்தப் பாதை நெடுகிலும் பல்லாயிரம் குறைகள் அங்கே காணப்பட்டாலும் ஆங்காங்கே பன்னீர் என்னும் இன்ப மழை சொரியும் நல்ல மரநிழலும் காணத் தவறுவதில்லை. பாலைவனச் சோலை போன்று நம் பயணப்பாதையில் குறுகிடும் அந்த மரநிழல்கள் நம் பாதையில் சந்தோசம் என்னும் பன்னீர் மழையினைச் சொரிந்து விட்டுப் போய்விடும். அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாத புதிர் நிறைந்த பாதையில் இப்படியான பாலைவனச் சோலைகள் அரிதாகவே தோன்றி மறைகின்றன…
எமக்கு எது நடக்கின்றதோ அது நமது நன்மைக்கே. எவையைல்லாம் நடக்கவில்லையோ அவையெல்லாம் இன்னும் நன்மைக்கே!! என நாங்கள் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்வோமானால் நமது வாழ்க்கைப் பாதையில் தோன்றும் சில சில கசப்பான நிகழ்வுகளை எமக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியும். நம்மைப் படைத்த அந்த இறைவனுக்குத் தெரியும் எவற்றை எமக்கு எப்போது எந்த சூழ்நிலையில் தந்தால் அவற்றால் எமக்கு நன்மை பயக்கும் என்று.
என்றுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நான் கண்ட உண்மையிது. நான் விரும்பிய பல விடயங்கள் என் கைநழுவிப் போயிருக்கின்றன. நான் விரும்பாமல் இருக்க தானாகப் பல நிகழ்வுகள் நடந்துள்ளன.. நான் விரும்பிய விடயங்கள் என் கை நழுவிப் போனபோதெல்லாம் எனக்கு மட்டும் என் இப்படி நடக்கின்றது என் பலதடவைகள் முன்னர் குழப்பதில் ஆழ்ந்து விடுவதுண்டு. ஆனால் சில நாட்களிலேயே அவ்வாறு நான் இழந்த சந்தர்பங்களின் மூலமாக நான் மிகப் பெரிய நன்மைகளை அடைந்திருக்கின்றேன். ஒன்றை நான் பெற முடியவில்லையே என நான் குழம்பியிருக்கும் போது நான் அவற்றைப் பெற்றிருப்பின் அதன் மூலம் பெற்றிருக்க வேண்டிய நன்மைகளைக் காட்டிலும் மேலான பலவற்றை நான் அவற்றை இழந்து அதற்குப் பதிலான மாற்றீடு ஒன்றைப் பெறும் போது பெற்றிருக்கின்றேன். என் நண்பர்களின் வாழ்விலும் இந்த உண்மை கண்ணுடாக நிகழ்ந்திருக்கின்றது.
நாம் செய்யும் எந்தக் காரியத்திற்கும் தடைக்கல் போடுவதற்கும் நம்மை இழிவுபடுத்திக் கதைப்பதற்கு எப்போதும் ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கும்.. அவர்களின் விமர்சனத்தைப் பற்றி நாம் கவலைப்படுவோமானால்.. நாம் நமது பாதையை விட்டு விலகி நடக்க வேண்டும். நமது இலக்கை யாருக்காகவும் எதற்காகவும் தடைப்படுத்வோ மாற்றிக் கொள்ளவோ கூடாது. நமக்கான பாதையை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்..
போற்றுபவர் போற்றட்டும்!
புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும்!
தொடர்ந்து சொல்வேன்!
ஏற்றதொரு கருத்தை என்னுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன், எவர் வரினும் நில்லேன்! அஞ்சேன்!
என்று நம்பாதையில் நாம் நம் சுயத்தோடு நடைபோடுவோம். காலம் நம் துணையாக தென்றல் காற்றை வீசச் செய்யும். அதன் இனிமை காண நாம் பயணிப்போம்..! எனவே நமது பாதை எதுவோ அதனை நாம் தெளிவாக வரையறுத்து நம் உள்ளம் சரி என வழிகாட்டும் பாதைவழி பயணிப்போமானால்.. நெஞ்சத்து நிம்மதி நம்மை வாரியணைக்கும்…
Categories: எனக்குத் தெரிந்தவை, எனது பார்வையில்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
மிகவும் நன்றாக இருக்கிறது, சுயத்தை விட்டு கொடுத்தால் நாம் நாமே அல்ல
நல்லா இருக்கு!
//எமக்கு எது நடக்கின்றதோ அது நமது நன்மைக்கே.//
இதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.போரால கஷ்டப்பட்டு முகாமில வாடி நிக்கிற சனங்களிட்ட போய் இதை சொல்லுவியளா?