இறைவன் அருளிய காதற் பரிசு – மழை


நீ வரும் வேளைகளில் எல்லாம்
என் வாசல்களில் பன்னீரைத் தூவுகின்றது மழை
நீ இல்லாத வேளைகளில் எங்கே
சென்றதுவோ!

இப்போது தான் புரிந்தது
நீயும் மழைத்துளியும் ஒன்றுதான் என்று
தொட்டுக் கொள்ளும் போதெல்லாம்
சிலிர்த்து உருகி
என் கையிரண்டில் தவழ்ந்து போகையில்!

மரணிக்கும் நேரத்திலும் சொர்க்கம் என்றால்
என்ன என்பதை அனுபவிக்கின்றன
என்கின்றேன் நான்
உன் மார்போடு விழுந்து சில்லுகளாகச் சிதறும்
மழைத்துளிகளினைப் பார்த்து
ஆனால் அவை உனது மானசீகத் தோழிகளின்
அணைப்பு என்கின்றாயே நீ
நீ வருகின்ற நேரங்களில் எல்லாம்
யாரோ மழைக்கு உளவு அனுப்புகின்றார்களே
அது நீயா எனக் கேட்டால்
சீ சீ நான் இல்லை என மழலைத்தனமாகச்
சிரிக்கும் போதே எனக்குள்
ஆரம்பிக்கின்றது அடை மழை.

மழைத் துளிகளுக்குச் சேலைகட்டிப்
பார்க்க ஆசைப்படுகின்றயே ஏன்
எனப் புரியாமல் விழிக்க
சீ போடா கண்ணனின் கள்ளக் கண்களினால்
நான் படும் அவஸ்தை போதாதா
என செல்லமாகச் சீண்டும்
உன் குறும்புத்தனத்தைப் என்ன சொல்ல..

கையில் பக்குவமாக ஏந்திய
மழைத்துளியொன்றை பரிசளிக்க நீட்டுகின்றாய்
அப்போது உன் நெற்றியில் இறங்கி
உதட்டில் தவழத்துடிக்கும்
அந்தத் துளிதான் வேண்டும் என்றால்
சீ போடா எனக் கட்டிக்கொள்ளும் போதே
மண்ணைக் குளிர்விக்கின்றனவே அந்தத்துளிகள்

நமக்காக அந்த இறைவன் அனுப்பிய
புதுக்கவிதைதான் இந்த மழை என
நான் புதுக்கவிதை சொல்லும் போது
இல்லை இல்லை
நமக்காக அந்த இறைவன் அருளிய
காதற் பரிசுதான் இந்த மழை
எனச்சிரிக்கின்றாய் நீ
மீண்டும் நனைகின்றேன் நான்
ஓர் அடைமழையில்.

சில் எனச் சிதறும் பனிமழை
உன் சிரிப்பு
சிலிர்க்க வைக்கும் இதமான தென்றல்மழை
உன் முத்தம்
அடித்துக் கொட்டும் பருவமழை
உன் அன்பு
சில சமயம் தலைகாட்டி மறையும் அந்திமழை
உன் கோபம்
மதியம் வந்து அரவணைக்கும் கனமழை
உன் தழுவல்
வாசல் நனைக்கும் துமிமழை
உன் சீண்டல்
நள்ளிரவில் பெய்யும் நடுநிசிமழை
உன் கனிவு
அதிகாலை வரும் தூறல்மழை
உன் சிணுங்கல்
இத்தனை மழையையும் உனக்குள்
அடக்கும் நீ யாரடி..?

Categories: கவிதை, பாதித்தவை

12 comments

  • இளைய கவி

    இப்போது தான் புரிந்தது
    நீயும் மழைத்துளியும் ஒன்றுதான் என்று
    தொட்டுக் கொள்ளும் போதெல்லாம்
    சிலிர்த்து உருகி
    என் கையிரண்டில் தவழ்ந்து போகையில்
    ரொம்ப நல்லா இருக்கு தல‌

  • seidhivalaiyam.in

    Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

  • கார்த்தி

    படங்கள் சுப்பராய் இருக்கு!! lol
    தொடர்ச்சியாக கவிதை பதிவுகள்.
    இன்னுமொரு முத்துக்குமாராக முடிவோ?

  • சுபானு

    நன்றி கார்த்தி
    //தொடர்ச்சியாக கவிதை பதிவுகள்.
    இன்னுமொரு முத்துக்குமாராக முடிவோ?

    அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. வேறுபதிவுகள் எழுதுவதற்கு முறையான நேரம் கிடைக்கவில்லை.. அதனால்த்தான் சும்மா கிறுக்கிப்போட்டு போட்டுள்ளேன்.. இதனையெல்லாம் கவிதையென்றால் உண்மையிலேயே கவிதை எழுதுபவர்களை என்னவென்பது.. 😀

Leave a Reply

Your email address will not be published.