‘நேரம் போகுதம்மா.. கெதியா சாப்பாட்டத்தாம்மா…!’
‘கொஞ்சம் பொறடி, இட்லியை கோப்பையில போட்டுக்கொண்டிருக்கிறேனல்ல…! ‘
‘இண்டைக்கு முதல் நாளம்மா… நேரத்தோட போகணும்மா… சாப்பாட்ட ஊட்டிவிடம்மா…’ மஞ்சரியின் காலை நேர பரபரப்பு அவள் அம்மாவையும் பாதித்திருந்தது.
கணிதத்தினைக் காதலிப்பவள் மஞ்சரி. எப்போதுமே எதையாவது சாதிக்கணும் என்கின்ற தீ அவள் மனதிற்குள் எரிந்து கொண்டே இருக்கும். எவரையும் அனிச்சையாய்த் திரும்பிப்பார்க்க வைக்கும் அழகு. புதுமுக மாணவியாக மொறட்டுவப் பொறியியற் பீடம் நுழையும் நாள் இன்று.
‘ஆறுதலாச் சாப்பிடடி.. இன்னும் நேரம் இருக்கு…’ என்று இட்லியை மெதுவாக ஊட்டிவிட்டாள் அம்மா. ‘இன்னும் அரை மணி நேரத்தில கம்பஸ்ல நிக்க வேணுமம்மா… இப்பிடி ஆறுதலாகச் சாப்பிட்டா இனோகிறேஸன் செறிமணிக்கு போனமாதிரித்தான்.. காணும் விடம்மா…’ என்றாள் பதிலுக்கு. ‘
வீட்டில கதைக்கிறது போல அங்கேயும் கதைக்காத சீனியேஸ் எல்லாம் இருப்பாங்க, கவனமாப் பாத்துக் கதைக்கவேண்டும் சரியா…’.
‘ம்ம்ம்…. நானாப் போய் கதைக்கமாட்டனம்மா… அப்பிடிக் கதைத்தாலும் மரியாதையாத்தான் கதைப்பன்…’ என்று தண்ணீரைக் குடித்து விட்டு கம்பஸ்ஸிற்குப் புறப்பட்டவளை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள் அம்மா.
‘மத்தியானம் வடிவாச் சாப்பிடு, மில்க் பக்கற் ஒன்றும் வாங்கிக்குடி… என்ன…’ என்று டாட்டா காட்டினாள்.
கட்டுப்பெத்த சந்தியில் அவளுக்காகக் காத்திருப்பது போல் நின்றுகொண்டிருந்தது 255 ம் இலக்கப் பேருந்து. ‘கம்பஸ் லங்க எக்காய்’ என 8 ரூபாவை எடுத்து கண்டைக்ரரிடம் நீட்டினாள் மஞ்சரி. பலவித வண்ணக் கற்பனையுடன் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து புதுக் காற்றைச் சுவாசிக்கத்; தொடங்கினாள். அந்தப் புதுக்காற்று அவளுக்குள் புது உற்சாகத்தையே ஊற்றெடுக்கச் செய்தது. இது அவள் வாழ்க்கையின் இன்னொரு அத்தியாயத்தின் தொடக்கம். வாழ்க்கையின் புதுப்பது அனுபவங்களையும் புதிய நண்பர் வட்டங்களையும் உருவாக்கித்தரப் போகின்ற இனிய பயணத்தின் முதற்படி. அந்த முதற்படியில் மகிழ்ச்சியுடன் காலெடுத்து வைக்க புதுக் கற்பனைகளுடன் தயாராக இருந்தாள். மேலும் மேலும் முன்னேறிச் செல்ல ஆர்வத்தைத் தூண்டும் ஆனந்தக் கற்பனை அது. அவளையும் அறியாமல் ஒரு சிறு புன்னகை அவள் உதட்டோரம் குடிகொண்டிருந்தது.
பஸ்ஸில் இருந்து இறங்கியவளை ‘புதுமுக மாணவர்களை வரவேற்கின்றோம் – சீனியேஸ்’ என்று மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்த வரவேற்புப் பதாகை வரவேற்றது. வாசலிலே பல ஆண்களும் பெண்களும் நின்று வரவேற்றது என்னமோ தனக்காகவே எல்லாமாகத் தோன்றியது மஞ்சரிக்கு. மிகுந்த பெருமையுடன் முதற்சுவட்டை பொறியியற் பீடத்தினுள் பதித்தாள். அடுத்த சில கணங்கள் மிகவேகமாக நகர்ந்தன. யார் யாரோ வந்து ஏதேதோவெல்லாம் கேட்டார்கள். ஏதேதோவெல்லாம் கூறினார்கள். கடைசியில் ஒரு நிரையில் நிற்க வைத்தார்கள்.
‘பெயர் என்ன…’
‘…….’
‘உன்னத்தான்டி… கேட்டது விளங்கலையாடி…?’
‘மஞ்சரி’.
‘ஓ… அப்பனில்லையோடி….!’
‘…..’
‘;என்ன மேடம்… கேள்வி கேட்டா பதில் சொல்லமாட்டிங்களோ…?’
‘மஞ்சரி சண்முகநாதன்…’.
‘யாரு சீனியேஸைச் சந்தித்தாய, யாரைத் தெரியும்?
‘……’ மீண்டும் அதே மௌனமே அவளிடம் இருந்து பதிலாக வந்தது.
‘ஓ.. ஒருத்தரையும் சந்திக்கவும் இல்ல… ஒரு சீனியேஸையும் தெரியாதுவேற… சீனியேஸ்சோட எப்பிடிக் கதைக்கவேணும் எண்டு கூடத் தெரியாது… ஆனா பெரிய நிமித்தலாக் கிளம்பி வந்துடுவீங்க… இங்க நாங்க எல்லாத்தையும் உங்களுக்கு செய்துதரவேணும்… குப்பிவேற எடுக்கணும் என்ன….!’
அப்போதுதான் அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். 5.8 அடிக்கும் குறையாத உயரம். வெண்மை என்று சொல்லும் அளவிற்கு இல்லாவிடினும் சருமம் பார்ப்பதற்குப் போதுமான நிறம். அரை குறையாக மழிக்கப்பட்ட தாடி மீசை அவனை ஒரு வேண்டாதவனாகவே உணர்த்தியது அவளுக்கு. இவன் யார்? எதற்காக இவ்வாறு பேசுகின்றான்? இவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என பல கேள்விக் கணைகள் அவளை துளைத்தெடுத்தன. ஒருவேளை சீனியேஸாக இருக்குமோ? எதற்கும் அவனிடமே கேட்டுவிட்டல் என்ன?… அவன் இவ்வளவு கேள்விகள் கேட்கும் போது நான் ஒரு கேள்வி கேட்டால் என்ன தப்பாவாகவா போகப்போகின்றது?
‘நீங்கள் யார்?….. சீனியரா?…!’
‘?????!!!!!!!!!!!!!!!………’
‘ஏய் யார் கூடக் கதைத்துக் கொண்டு இருக்கிறோம் என்று சொன்னாத்தான் கதைப்பியோடி…?’ அவன் தாறுமாறாக பேசத்தொடங்கினான். அவளால் அதற்கு மேல் ஓரு வார்த்தை கூடக் கேட்கக்கூடிய சொற்களாக அவை இருக்கவில்லை. காதுகளை இறுக மூடிக்கொண்டாள். மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள். அவளுக்கு இது புதிது. அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது. விறுவிறுவென்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
இனோகிறேஸன் செறிமணி சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் அவளால் முழு ஈடுபாட்டுடன் அதில் கவனத்தைச் செலுத்த முடியாமல் இருந்தது. ஒருவித பயம் கலந்த கோபம் அவளை ஆட்கொண்டிருந்தது. நேரம் கடந்துகொண்டேயிருந்தது. இடைவேளையும் வந்தது. நீண்ட சிந்தனையின் பின் ஒரு தெளிவு அவளுக்குள் பிறந்தது. எதையும் எதிர்கொள்ளும் துணிவினைத் தந்தது அந்தத் தெளிவு. இடைவேளைக்கு அனைவரும் சிற்றூண்டிச் சாலைக்கு சீனியேஸால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கே அவள் கண்கள் அவனையே தேடின…
‘மன்னிச்சிடுங்கண்ணா..’ தானாக வலியச் சென்று கதையைத் தொடக்கினாள் மஞ்சரி. ‘எனக்கு இங்க யாரையும் தெரியாதண்ணா.. சீனியேஸோட எப்பிடிக் கதைக்கவேணுமெண்று இப்ப தெரிஞ்சிற்றண்ணா.. இனிமே நான் அப்படியெல்லாம் கதைக்கமாட்டனண்ணா.. என்ன மன்னிச்சிடுங்கண்ணா….’ இந்தக் குளிர் வார்த்தைகளால் அவன் அடியோடு மாறிப்போனான்.
அவள் எதிர்பார்த்ததும் அதைத்தான். அவள் எதிர்பார்த்த அடுத்த சில வார்த்தைகளை அவன் முன்மொழிந்தான்.
‘சரிசரி இப்ப புரிஞ்சுது தானே.. சீனியேஸ் எண்டா எவ்வளவு முக்கியமெண்டு.. இனிமே எந்த சீனியர் கதைத்தாலும் ஒழுங்காப் பதில் சொல்லோணும் புரியுதா?..’
‘… சரியண்ணா…’ .
‘அது சரி என்ன பெயர் சொன்னனி?’.
‘மஞ்சரி சண்முகநாதன்…’.
‘என்ன ரிசள்ட் எடுத்தனி?’
‘ 3ம் அதிவிசேட சித்தியண்ணா..’.
‘..ம்.. என்ன ஃபீல்ட் விருப்பம்..?’
‘கொம்பியூட்டரண்ணா..’.
‘ம்.. அப்ப நல்லாப் படிக்கணும் என்ன..’.
‘சரியண்ணா..’
‘ம்.. உண்ட பிறந்த திகதி என்ன?’,
‘……’
‘.. உன்னத்தான் கேட்டேன்..?’
‘..எனக்கு ஒரு புதிர் தெரியுமண்ணா.. அதத்தான் யோசிக்கிறன்..’ என்றாள்.
‘என்ன புதிரா.. எனக்குத் தெரியாததா!… எங்க சொல்லு பார்க்கலாம்…!’.
‘உங்கட பிறந்த மாதத்தை 31 ஆலும் பிறந்த திகதியை 12 ஆலும் பெருக்கி, அவற்றின் கூட்டுத்தொகையைச் சொன்னீங்களண்டா நான் உங்கட பிறந்த மாதத்தையும், திகதியையும் சொல்லுவன் ..’ என்றாள்.
‘அதெப்பிடி …!’ என்றான்.
‘சொல்லுங்களேன்..’
‘ம் 275 வருகுது…’
அவள் சில மனக்கணக்குகளைச் செய்தாள். இறுதியில் ‘ உங்கட பிறந்த திகதி 5ம் மாதம் 10ம் திகதிதானே..’ என்றாள். அவன் ஆச்சரியத்தில் தலையை மட்டும் ஆட்டினான்.
‘அதெப்பிடி நானும் கண்டுபிடிப்பன் … உன்ர பிறந்த மாதத்தை 31 ஆலும் பிறந்த திகதியை 12 ஆலும் பெருக்கி அவற்றின் கூட்டுத்தொகையைச் சொல்லு… நானும் உன்ர பிறந்த மாதத்தையும், திகதியையும் கண்டு பிடித்துச்சொல்லுறேன்.’ என்றான் வெட்டி வீம்புக்கு.
‘386 ..’ என்றாள்.
அவன் சிறிது நேரம் ஏதேதோ கணக்குப் பார்த்தான். அவனால் முடியவில்லை. வீணாக இவளிடம் வாயைக்குடுத்து விட்டோமோ என மனதுக்குள் எண்ணிக்கொண்டது மஞ்சரிக்குப் புரிந்தது போலும், அவளின் உதட்டில் பூத்திருந்த ஒருவித கர்வப் புன்னகை அதை உணர்த்தியது. அந்தத் தருணம் அவளுக்குப் போதுமானதாக இருந்தது அவள் நினைத்ததைச் சாதிக்க.
‘என்னண்ணா…? கண்டுபிடித்து விட்டீங்களா..?’
‘…..’.
அவளது மௌன மறுமொழிகள் இப்போது அவன் வசமானது. தன்நிலையை உணர்ந்து கொள்வதற்கு அவனுக்குச் சிறிது அவகாசம் தேவையாக இருந்தது.
‘முடிந்தால் நாளை விடையைக் கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்…’ .
அந்த ‘முடிந்தால்’ என்ற சொல் தன்னைச் சூழ்நிலைக் கைதியாக்கி விட்டதை உணர்ந்தானோ என்னமோ அவ்விடத்தை விட்டு வேகமாக வெளியேறினான் அவன். சூழ்நிலைகளையும் சந்தர்ப்பங்களையும் தமக்கேற்ற விதமாகச் சாதகமாக்கி மற்றவர்களின் வாதங்களையும் வார்த்தைப் பிரயோகங்களையும் வைத்தே அவர்களைத் தமது ஆளுமைக்குள் கொண்டு வரக்கூடிய திறமை கைவரப்பெற்றவர்கள் ஒரு சிலர்தான் இருப்பார்கள். வாயுள்ள பிள்ளை பிளைக்கும், என்ற பழமொழியின் தார்ப்பரியமும் இதுதானே. தம்முடைய திறமைகளை மற்றவர்கள் மீது பயன்படுத்தி தங்களை வளப்படுத்திப் பார்ப்பதில் இவர்களுக்கு அலாதிப் பிரியம் உண்டு. அந்த ரகத்தைச் சேர்ந்தவள்தான் மஞ்சரி. அவனைச் சந்தித்த முதற் கணத்திலேயே, அவனுடைய வார்த்தைப் பிரயோகத்திலிருந்தும், தன்னை முன்னிலைப்படுத்திப் பார்க்க ஆசைப்படும் இயல்பிலிருந்தும் அவனுடைய இயலாமையைப் புரிந்து கொண்டாள் மஞ்சரி. தனது அறிவுத் திறமையைப் பிரயோகிக்கவேண்டிய தருணத்தில் மிகச் சரியாகப் பிரயோகித்து, அவனைத் தனது ஆளுமைக்குள் கொண்டுவந்துவிட்டாள். இதற்குப் பின்னர் நடைபெறப்போகும் நிகழ்வுகள் என்னவென்று அவளுக்கு ஊகிக்கக் கூடியதாக இருந்தது. எதற்கும் நாளை வரை காத்திருப்போம் என மனதுக்குள் எண்ணிக்கொண்டு மீண்டும் சிவில் ஒடிட்டோரியத்துக்குள் கால்வைத்தாள்.
மறுநாட் காலையும் அதே பரபரப்புடன் விடிந்தது அவளுக்கு. முதல்நாள் போலவே சிவில் ஒடிற்ரோரியத்திற்கு வந்து சேர்ந்தாள். அவள் கண்கள் மீண்டும் அவனைத் தேடின. ஆனால் இந்தத் தேடலில் சிறிது வித்தியாசம் இருந்தது. தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான தேடலே அது. அங்கோ அவன் இன்னோர் மூலையில் வேறு ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தான். மஞ்சரியைக் கண்டதும், காணதது போலத் தலையைத் தாழ்த்தி வேறு எங்கோ பார்த்தான். தன்னுடைய வெற்றியை மேலும் உறுதிப்படுத்துவதற்காக அவனுடன் போய்ப் பேச்சுக் கொடுக்கலாமோ என எண்ணி அவனை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்ததுதான் தாமதம் அவன் விறுவிறுவென்று, சிவில் ஒடிற்ரோரியத்தை விட்டு அகன்றான். மஞ்சரிக்கோ திகைப்பு மேலிட்டது, ஆனாலும் உள்ளூர சந்தோசம் குடிகொண்டது. மனதின் எங்கோ ஓர் மூலையில் அவன்மேல் சிறு பச்சாதாபமும் கூடவே உருவாகியது. கடைசியில் அந்தப் பச்சாதாபம்தான் மேலோங்கத் தொடங்கியது.
இனோகிரேசன் செறிமணியின் இரண்டாம் நாளும் அவளுக்கு சந்தோசத்தைக் கொடுக்கவில்லை. அவனைக் கூடுதலாகப் பழிவாங்கிவிட்டோமோ என எண்ணினாள். ஆனாலும் தன்னுடைய முதல் நாள்ச் சந்தோசத்தைக் கெடுத்த அவனைச் சும்மா விடவும் மனது இடம் கொடுக்கவில்லை. வேண்டாம் இத்தோடு முடித்துவிடுவோம் என கடைசியில் முடிவுக்கு வந்தவளாய் சிறு பேப்பரும் பேனாவும் எடுத்து ஏதேதோ எழுதினாள். மதிய இடைவேளையில் அவனைச் சந்திக்க காத்திருந்தாள்.
எங்கெங்கோ தேடிக் கடைசியில் அவனைக் கண்டுபிடித்து தான் எழுதிவைத்திருந்ததை எடுத்து நீட்டினாள் மஞ்சரி. முதலில் வாங்கத் தயங்கினாலும் கடைசியில் அந்தத் துண்டுச் சீட்டை வாங்கிக் கொண்டான்.
‘எனது புதிருக்கான விடை …’ என மட்டும் கூறிவிட்டு மீண்டும் சிவில் ஒடிற்ரோரியத்திற்குள் நுழைந்தாள் மஞ்சரி.
அந்தச் சீட்டில்…
12 x + 31 y = 386
x + 31/12 y = 32 and 2 மிகுதி. ——(001)
ஆகவே 2*7 / 12 = 1 and 2 மிகுதி. —– (002)
இந்த மிகுதிதான் ( அதாவது 2 ) எனது பிறந்த மாதம். (February)
மாதம் கண்டுபிடித்தால் இலகுவாக பிறந்த நாளைக் கண்டு பிடிக்கலாம் தானே.
(386 – 31*2)/12 = 27;
எனவே எனது பிறந்த நாள் மாசி 27.
TFT ( – Tit For Tat ) …
என எழுதப்பட்டிருப்பதனைப் பார்த்து அவன் தான் மாட்டிக்கொண்டது இலேசுப்பட்டவளிடம் இல்லை என்பதை உணர்ந்து நிமிர்ந்து அவளைப் பார்த்தான். எதுவிதமான சலனமும் இன்றி மஞ்சரி சிவில் ஒடிற்ரோரியத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தாள்..
[ மொரட்டுவைப் பல்கலைக்கழக பொறியியற் பீடத்தில் வருடாந்தம் மலரும் சங்கமம் சஞ்சிகையின் 2008ம் வருட பிரதியில் பிரசுரிக்கப்பட்ட ஆக்கம் ]
Categories: சிறுகதை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
ஆகா!
நன்றாய் இருக்கிறது.
அதுசரி இப்பவும் ராக்கிங் நடக்குதோ மொறட்டுவவில?
அருமை சுபானு! உங்கள் கதைக்களமும், உரையாடல் நேர்த்தியும் படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன. ஒரு கனமான சமன்பாட்டோடு கதை பயணிப்பது நன்றாயிருக்கிறது. புதிர் புதைந்த சிறுகதை! அதிகாரத்திற்கு எதிரான அறப்போர் அறிவின் தலைமையில் இருக்கும் என்பது என் தனிப்பட்ட தெளிவு – உங்கள் TFTயினால். வாழ்த்துக்கள்!
எந்த காலத்திலே 255 டிக்கட் 8 ருபாயாயிருந்திச்சு?
255 ல்ல சீட் எடுக்கிறதே நாய் படாபாடு அதுல யன்னலோர சீட்டும் காற்றை ரசிப்பதும் எப்படி?
@வலசு – வேலணை
நன்றிகள்… ராக்கிங் இல்லை அது.. அன்பான கலந்துரையாடல் தான் அது..
@ஜெகநாதன்
மிக்க நன்றிகள்…
//அதிகாரத்திற்கு எதிரான அறப்போர் அறிவின் தலைமையில் இருக்கும் என்பது என் தனிப்பட்ட தெளிவு – உங்கள் TFTயினால்.
அறிவால் சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை..
@ Sanchayan
//எந்த காலத்திலே 255 டிக்கட் 8 ருபாயாயிருந்திச்சு?
ஆமாம் என்ன.. 6 ரூபாய் தானே. சற்று மறந்து விட்டது..
//255 ல்ல சீட் எடுக்கிறதே நாய் படாபாடு அதுல யன்னலோர சீட்டும் காற்றை ரசிப்பதும் எப்படி?
ஏன் நீங்கள் 7:45 இற்கு முன்னர் பஸ் எடுத்தால் சீற் எடுக்கலாமே… நன்றாக இளங்காற்றைச் சுவாசிக்கலாமே.. 🙂
நல்லா இருந்தது.. ஹி ஹி படங்களும் தான்.
@குறை ஒன்றும் இல்லை
மிக்க நன்றிகள்…
அருமையான கதை,
கணக்கும் நன்றாக இருக்கிறது.
வெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் வலைப்பூ பக்கம் வருகிறேன்.
அப்புறம் அந்த புகைப்படங்களில் இருக்கும் அந்தப் பெண் யார் என்று சொல்லவே இல்லையே!
கணக்குதான் இன்னும் புரியவில்லை.
நான் கணக்குல 'பதுங்கும்' புலி. ஹிஹிஹ… :)))
@ஊர்சுற்றி
//வெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் வலைப்பூ பக்கம் வருகிறேன்.
ம்… அதுசரி பெயரிலேயே இருக்குத்தானே.. ஊர்சுற்றி என்று. அப்புறம் இடைக்கிடையே தானே எனது ஞாபகம் வரும்.. சும்மா..
நன்றிகள்
//அப்புறம் அந்த புகைப்படங்களில் இருக்கும் அந்தப் பெண் யார் என்று சொல்லவே இல்லையே!
அவள்தான் இந்தக் கதையின் நாயகி மஞ்சரி.
@ஊர்சுற்றி said…
// கணக்குதான் இன்னும் புரியவில்லை.
ஹிஹிஹ… :)))
அப்படின்னா இது உண்மைக்கதையா?!
ச்ச… உண்மை சம்பவமா?
சொஞ்சம் கற்பனை… நிறைய உண்மை… 🙂
நல்ல படைப்பு. பாராட்டுக்கள்
மிக்க நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
/*…ராக்கிங் இல்லை அது.. அன்பான கலந்துரையாடல் தான் அது..
..*/
நல்ல சமாளிப்பு..
/*…
'ஓ… அப்பனில்லையோடி….!'
…
அவளால் அதற்கு மேல் ஓரு வார்த்தை கூடக் கேட்கக்கூடிய சொற்களாக அவை இருக்கவில்லை. காதுகளை இறுக மூடிக்கொண்டாள். மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள்.
…*/
தொடரும் அனுபவங்கள்… மறுப்பவர்கள் மரியாதை தெரியாதவர்களாம்.. 😛
/*…அதிகாரத்திற்கு எதிரான அறப்போர் அறிவின் தலைமையில் இருக்கும் என்பது என் தனிப்பட்ட தெளிவு
…*/
விடப்படும் தவறுகள் புரிகின்றன…
/*…
@ Sanchayan
//எந்த காலத்திலே 255 டிக்கட் 8 ருபாயாயிருந்திச்சு?
ஆமாம் என்ன.. 6 ரூபாய் தானே. சற்று மறந்து விட்டது..
..*/
அதுசரி பஸ்ஸில டிக்கெட் எடுத்தா எல்லோ தெரியிறதுக்கு… 😀 lol
Excellent article, I will take note. Many thanks for the story!
Superub