நீண்ட காலத்தின் பின்னர் இன்று குயிலின் இனிய கூவும் குரலினைக் கேட்டேன். கற்பனைக்கு உடனடியாகச் சென்றுவிடாதீர்கள் உண்மையில் நான் சொல்ல வந்தது குயில் என்னும் பறவையினைப் பற்றித்தான். ஒரு சின்னப் பறவைக்குள் என்ன ஒரு கம்பீரமான கணீர் என்ன குரல் அடங்கியிருக்கின்றது. தன் ஜோடிக் குயிலினை என்ன அழகாகக் கூவியழைக்கின்றது அந்தப் பறவை. என்ன ஒரு இனிமையான குரல். கேட்பவர்களை மயக்கும் மன்மதக் குரல். எந்தவிதமான கரகரப்புக்களும் இன்றி தெளிவாக ஒலிக்கும் குரல். இளவேனிற் காலம் என்றாலே எல்லோருடைய ஞாபகத்திற்கும் வருகின்ற ஒரு முக்கியமான அம்சம் குயிலின் கூவல்தான்.
இலங்கை போன்ற வெப்ப வலய நாடுகளில் குயிலின் குரலுக்குப் பஞ்சமிருக்காது. இருந்தும் நான் கிட்டத்தட்ட நான்கு வருடங்களின் பின்னர் இன்றுதான் குயிலின் குரலினை மீண்டும் கேட்டேன். பொதுவாக இந்தக் கொழும்பு நகரிலே கட்டடங்களும் சன நடமாட்டமும் அதிகமாகக் காணப்படும். எனவே இங்கே – கொழும்பிற்கு நான் வந்த நாள்முதல் இன்றுவரை குயிலின் கூவலினை இரசிக்க முடியவேயில்லை. ஆனால் தெகிவளையில் நாம் தற்போது வசிக்கும் வீடு சற்று சனசந்தடியற்ற உயரமாக தொடர்மாடிக் கட்டடங்களற்ற ஒரு தனி வீடு. வீட்டின் முன்னால் நல்ல குளுமையான மரங்கள் உண்டு. இங்கே என்னைத் தேடி வந்தது போல வந்து கூவிச்சென்றது அந்தக் குயில். இனிமையாகக் கூவிச் சென்றது மட்டுமல்லாமல் என்னை பதினைந்து வருடங்களுக்கு முன்னால் அழைத்துச் சென்றுவிட்டது அந்தக் குயில்.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சுண்டிக்குளியில் வசித்து வந்தது நல்ல அழகான சோலை சூழ்ந்த வீடு. அந்த வீட்டைச் சுற்றி பலவகையான மரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. வேலியோரத்தில் கடற்கரைத் தாவரமான பானை மரங்கூட அங்கே வளர்ந்திருந்தன என்றால் பாருங்களேன். எனது பள்ளிப் பருவத்தில் பல இனிய மறக்க முடியாத அனுபவங்களை எனக்குக் கற்றுத் தந்த வீடு அது. அங்கே வசந்தகாலம் என்றாலே மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும். குயில் ஒன்று இரண்டெல்ல பல இனிமையாகக் கூவும். ஒன்று கூவி முடிய மற்றது என அவற்றிற்குள் குரற்தேர்வுப் போட்டி போல மாறிமாறிக் கூவிக்கொண்டே இருக்கும். விடிந்தாற் போதும் அவை கூவத்தொடங்கிவிடும். ஏனோ தெரியாது அவற்றின் குரலில் ஏதோ ஒரு மயக்கம் எனக்கு. பல சமயங்களில் நானும் பதில்ப் பாட்டுப் பாடுவது போல் கு… கூ…. என அவற்றோடு கூவிப் பார்த்து மகிழ்வதுண்டு. சில சமயங்களில் சின்னக் கதிரையை எடுத்துச் சென்று மரத்திற்கு கீழே அமர்ந்து அவற்றைப் பார்த்து இரசித்ததும் உண்டு. அந்த அளவிற்கு குயில்கள் என்னைக் கவர்ந்திருந்தன.
ஆனால் காலம் இன்று எந்த அளவிற்கு மாறிவிட்டன – மாற்றிவிட்டது. அந்த அளவு எண்ணிக்கையான குயில்களைப் பார்ப்பதே குதிரைக் கொம்பு போல ஆகிவிட்டது இங்கே. நின்று ஒருநிமிடம் கூட இரக்க முடியாமல் சுழன்றோடும் வாழ்க்கைச் சக்கரம். நரகமயமாகிவிட்ட நகர்ப்புற வாழ்க்கை. மொத்தத்தில் அது ஒரு இனிமையான காலம். அந்தக் காலம் இனிமேல் திரும்புமா என்பது கேள்விக்குறியே!
Categories: எனது பார்வையில், பாடசாலை நாட்கள், பாதித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
Leave a Reply