மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்
மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட..
மலர்த்தோட்டம் எதிர் பார்க்கும் இளவேனிற் காலம்
பாவையும் ஒரு பூவினம்.. அதை நான் சொல்லவோ….
என்ற அந்தப் பாடல்தான் சிவனொலிபாத மலை பற்றி நினைக்கும் போது என் மனதில் நிழலாடுகின்றது. மார்கழி மாதப் பின்னிரவு நேரத்தில் மலைப்பாதையின் ஓரங்களில் பளிச்சிடும் வீதி விளக்குகள் எம்மை வழிகாட்டி அழைத்துச் சென்றன. வானத்திலிருந்து பூமிக்கு இறங்கும் மின்னல்க் கொடியினைப் போன்று படர்ந்து நீண்டிருந்தது, அந்த நள்ளிரவில் மலைப்பாதை விளக்கு வெளிச்சம். அந்த அழகிய தோற்றத்தை இரசித்தபடி மலையுச்சியை அண்மித்துக் கொண்டிருந்தோம். இதோ வந்துவிடும் இதோ வந்துவிடும் என்று ஏறிக்கொண்டிருந்தோமே தவிர முடிவு மட்டும் காணமுடியவில்லை. மேலிருந்து இறங்கிக்கொண்டிருந்தவர்கள் எங்களுக்கு உற்சாகம் ஊட்ட இன்னும் கொஞ்சத் தூரம் தான்… இவளவிற்கு ஏறிரிங்க.. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கூறிச் சென்ரார்கள்..
இவ்வாறாக இடைத்தாகற் தேநீர்க் கடையொன்றில் 60 ரூபாவிற்கு தேநீர் (Plain Tea) வாங்கிப் பருகிவிட்டு எமது பயணத்தைத் தொடர்ந்தோம். அந்த நேரத்தில் அந்தக் குளிருக்கு எமக்கு அந்தத் தேநீர் புது உற்சாகத்தைத தந்தது. பின்னர் நாம் ஒரு பெளத்த விகாரையை அடைந்தோம். அங்கு எல்லோரும் ஒரு வெள்ளை நிற நூற்பந்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். நாம் பட்டம் விட யாழ்ப்பாணத்தில் வாங்கும் நூற்பந்து போன்று காணப்பட்டது. மேலே சென்று எல்லோரும் என்ன பட்டமா விடப்போகின்றார்கள் என அவர்களைப் பார்த்து நகைத்து விட்டோம். ஆனாலும் எமக்கு அவர்கள் எதற்கு வெள்ளை நூற்பந்து விற்கிறார்கள் என்று புரியவில்லை. அங்கிருந்த பெளத்த நூல் வியாபாரி ஒருவரிடம் விசாரித்த போது.. இந்த நூலை வாங்கி அங்கிருந்த பாறை ஒன்றில் கட்டி அப்படியே அந்த நூலை மேலே மலை உச்சிக்கு இழுத்துச் சென்று அங்கிருக்கும் இன்னோர் பாறையில் கட்டினால் நாம் நினைத்தது நடக்கும் எனக்கூறினார். எமக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர்களின் அந்த நம்பிக்கையையும் அவர்களின் வியாபாரத்தையும் விமர்சிக்காது ஒரு நூற்பந்தை வாங்கிச் சென்றோம். ஆனால் கட்டவில்லை.
பின்னர் நாம் ஒருவழிப்பாதை ஒன்றினூடாக மலையுச்சியை அடைய நடக்க வேண்டியிருந்தது. நடுவிலே கம்பி ஒன்று அடிக்கப்பட்டு மேலேறுபவர்களையும் கீழிறங்குபவர்களையும் வேறு பிரிப்பதாய் அமைந்திருந்தது அப்பாதை. அப்பாதை அண்ணளவாக 1km தூரத்திற்கு நீண்டிந்தது. அப்பாதையினூடு நாம் மலையுச்சியை பின்னிரவு 4 மணியளவில் அடைந்தோம்.
கண்ணைக் கவரும் காட்சியாக அந்த பின்னிரவிலும் மின் விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது மலையுச்சியிற் காணப்பட்ட மண்டபம். அந்த மண்டபத்தினுள்ளேயே காணப்படுகின்றது சிவபெருமானின் பாதத்தடம் என நம்பப்படும் பாறைப்பகுதி. இரண்டு அடுக்குகளைக் கொண்ட அம்மண்டபத்தில் மேற் தட்டுப் பகுதியிலேயே பாதச்சுவடு காணப்படுகின்றது. கீழ்த்தட்டில் பிரயாணிகள் களைப்பாறவும் குளிர்காயவும் வசதியாக கட்டப்பட்டிருந்தது. அம்மண்டபத்தின் ஒரு மூலையில் கண்டாமணியொன்று கட்டப்பட்டிருந்தது. அம்மணியை நாம் எத்தனை முறை மலையேறினோமோ அத்தனை முறை அடிக்க வேண்டுமாம். அம்மண்டபத்தினுள் செல்லும் போது நாம் எமது பாதணிகளைக் களைந்து செல்லவேண்டும் என்ன அறிவிப்புப் பலகை ஒன்று அம்மண்டப வாசலிற் தொங்கிக் கொண்டிருந்தது. அதைப்படித்துவிட்டு எமது வெறும் கால்களை சிமெந்துத் தரையில் வைத்ததும் கால்களில் ஊசியால் குற்றுவது போன்று குளிர் கால்களினூடு எமக்குள் ஊடுருவியது. ஒருவாறு அந்தக் குளிரையும் சகித்துக்கொண்டு பாதச்சுவட்டைப் பார்க்கச் சென்றால் அங்கே பெரிய நிரலில் பக்த்தர்கள் நின்றிருக்க பொலீசார் அவர்களை விரைவு படுத்திக்கொண்டிருந்தார்கள். மேற்தட்டில் யாரும் தங்கிவிடாதபடி அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். மேலும் புகைப்படம் எடுப்பதையும் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.
ஒருவாரு முண்டியடித்து மேலே சென்றால்…. வந்ததே ஆத்திரம். கோபம், மனக்கொந்தளிப்பு எல்லாம் கலந்த ஒரு கலவையாக மனம் துடிக்க ஆரம்பித்தது. மலையுச்சியில் புத்தபிரான், பாதச்சுவட்டின் முன்னால் வெகு லாவாக அமர்ந்திருந்தார். மூன்று மதத்தினரும் வழிபடும் ஒரு புனித இடத்தில் ஒரு மதம் மட்டும் ஆதிக்கம் செலுத்துவது வேதனைக்குரிய ஒன்றாரும்.
சிவனொலிபாத மலையின் இன்னொரு விசேடமே, மலையுச்சியில் நின்று சூரிய உதயத்தை இரசிப்பது. அங்கிருக்கும் சனத்திரளில் குளிரையும் பொருட்படுத்தாது இடம் பிடித்து சூரிய உதயத்திற்காகக் காத்திருந்தால் மாத்திரமே முழுமையாக சூரிய உதயத்தை இரசிக்க முடியும். எனவே நாம் அங்கிருந்த ஒரு திறந்த வெளியில் அமர்ந்து கொண்டோம். அடிவானத்தில் ஒரு ஒளிக்கீற்று மட்டும் தெரிந்து கொண்டிருந்தது. நாங்கள் இருப்பதைப் பார்த்து எங்களின் பின்னால் ஒரு பெரிய கூட்டமே அடிவானத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. வானம் சிறிது மேக மூட்டமாக இருந்ததனால் எமக்கு நாம் உற்காந்திருக்கும் திசை சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் அடிவானத்தின் ஒளிக்கீற்றை வைத்து அத்திசைதான் கிழக்கு என எண்ணி அங்கேயே கிட்டத்தட்ட 1.5 மணித்தியாலங்கள் இருந்திருப்போம்… எங்களின் பின்னால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது…. என்னவென்று திரும்பிபார்த்தால்…. நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த திசை ‘தெற்கு’ என்று அப்போது தான் வெளிச்சமானது. தென்அடிவானத்தின் ஏதோ ஒரு ஒளிக்கீற்றை சூரியனின் கீற்று என நம்பி இருந்ததை எண்ணி எமக்கே சிரிப்பு வந்துவிட்டது.
கிழக்கு வானத்தில் யாரோ சிவப்பு, மஞ்சள் நிறங்களைத் தெளித்து விளையாடினாற் போன்ற அழது. கொஞ்சம் கொஞ்சமாக இரவுக் கோழியின் அடைகாப்பினில் இருந்து கோதுடைத்து வரும் சூரியக் குஞ்சின் அழகை கண்கொட்டாமற் பார்த்து இரசித்தோம். வர்ணிக்க வார்த்தைகள் போதாது…
பின்னர்.. வெளிவந்த சூரியன் எம்மைச் சுடத் தொடங்கு முன் மலையில் இருந்து இறங்கவேண்டும் என்பதனால் காலை 7.30 மணியளவில் இறங்க ஆரம்பித்து பகல் 11 மணியளவில் நல்லதண்ணிக்கு ஒரு குட்பாய் சொல்லிவிட்டு பேராதனை நோக்கிப் புறப்பட்டோம்….
Categories: சுற்றுலா, பாதித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
சயந்தன்,
எனக்கும் நீண்டகால ஆசையிருக்கிறது, அங்கு போகவேண்டுமென. இதை வாசித்தபின் இன்னும் கூடியிருக்கிறது.
வேண்டுகோளொன்று : சிவனொலிபாத என்பதை சிவனொளிபாத என்று மாற்றிவிடுங்கள்.
வருகைக்கும் தவறைச் சுட்டிக்காட்டியதற்கும் நன்றி மது…
மிக அருமையான இடம். ஒருமுறையாவது சென்றுவிட்டு வாருங்கள்
//ஒருவாரு முண்டியடித்து மேலே சென்றால்…. வந்ததே ஆத்திரம். கோபம், மனக்கொந்தளிப்பு எல்லாம் கலந்த ஒரு கலவையாக மனம் துடிக்க ஆரம்பித்தது. மலையுச்சியில் புத்தபிரான், பாதச்சுவட்டின் முன்னால் வெகு லாவாக அமர்ந்திருந்தார். மூன்று மதத்தினரும் வழிபடும் ஒரு புனித இடத்தில் ஒரு மதம் மட்டும் ஆதிக்கம் செலுத்துவது வேதனைக்குரிய ஒன்றாரும்.
//
உண்மைதான். பெரும்பான்மைகளுக்கிடையில் சிக்கித்தவித்து தான் பிரார்த்தனையும் செய்யவேண்டியுள்ளது.
சிவனொளிபாத மலை- இயற்கை எழில் கொஞ்சும் இன்னதமான இடம்.
(அங்கே ஒருமுறை போகாதவனும் முட்டாள், இரண்டாம் முறை போறவனும் முட்டாள்- சும்மா ஒரு rhyming க்கு 🙂 )
பல்கலையில் கற்கும் போது சென்றது. அழகான பிரதேசம்.
மேலே சென்றால், அங்கே மரங்கள், புகைமூட்டம், நெளிந்து வளைந்து செல்லும் மலைத்தொடர்கள் ஏதோ ஐரோப்பாவில் இருப்பதாக எண்ண வைத்தது.